அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?

அனுமன் உணர்த்தும் பாடம் என்ன?

#தடைகளே_வெற்றிக்கு
#உறுதுணை_ஹனுமான் #உணர்த்தும்_பாடம்

தடைகளே வெற்றிக்கு உறுதுணை!’ – ஹனுமான் உணர்த்தும் பாடம்
ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வில் இத்தனை கஷ்டங்களா என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். தனக்கு மட்டும் ஏன் இந்தத் துன்பங்கள் என்று கடவுளை நொந்துகொள்ளவும் செய்கிறார்கள். செய்யும் வினைகளுக்கு ஏற்பவே அத்தனைக் கஷ்டங்களும் வருகின்றன என்று தெரிந்தும் அவர்களின் புலம்பல்கள் வேடிக்கையானது. துன்பங்கள் யாவும் தடைகள்தான், அதைக் கடந்தால்தான் சாதனை என்று உணர்வதே இல்லை. மனித வடிவம் ஏற்று வந்த தெய்வங்களுக்கே சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்கள் வந்ததை நமது புராணங்கள் தெரிவிக்கின்றன. அதை எல்லாம் கேட்டும் நாம் மாறவில்லை. ஸ்ரீராமருக்குத்தான் எத்தனைத் துன்பங்கள். நாடிழந்தார், நல்ல உறவுகளைத் துறந்தார். அதுமட்டுமா? அன்னை சீதாதேவியை ராவணன் கடத்திச் சென்றதும், அனலில் விழுந்த புழுவாக ராமர் துடித்தார். ஒவ்வொரு கணமும் சீதையைக் காணவே வாழ்ந்தார். ராமாயணம் முழுக்க எத்தனைத் தடைகளை ராமர் கடந்தார் எண்ணிப் பாருங்கள். அன்னை சீதையை மீட்க சுக்கிரீவன் ஹனுமானை தேர்ந்தெடுத்தார். தெய்வத்தை மீட்கச் செல்லும் காரியம் என்றாலும், தடை வராமல் இருந்துவிடுமா என்ன? வரத்தான் செய்தது. மீட்கப்போவது சிவாம்சமாகிய ஹனுமான் என்னும் பலம்மிக்க தெய்வம், மீட்கப்படப் போவதும் திருமகள் எனும் சீதாதேவியை. அப்போதுமா தடை வரும் என்று கேட்கலாம். வந்தது; மூன்று வகையான தடைகள் வந்தன.

ஸ்ரீராமரை எண்ணி அவரது நாமத்தை ஜபித்தபடி பறந்து செல்லலானார் ஆஞ்சநேயர். முதலில் அவர் சந்தித்தத் தடை, `மைநாகம்’ என்னும் மலை. பறந்துகொண்டிருந்த ஹனுமானை நோக்கி எழுந்த இந்த மலை, ஹனுமனை மேற்கொண்டு பறக்க முடியாதபடி தடுத்தது. `இது ஏதோ சூழ்ச்சி’ என்று ஹனுமார் தனது மார்பினால் இடிக்கத் தொடங்குகிறார். அவரது தாக்குதலைத் தாங்க முடியாத மைநாக மலை, ‘நான் உங்கள் எதிரியில்லை நண்பனே! நீண்ட தூரம் பறந்து வரும் உங்களுக்கு இளைப்பாறுதல் தரவே விரும்பினேன், எனவே, என்னில் இருந்து தங்கிச் செல்லுங்கள்’ என்று வேண்டிக்கொண்டது. உண்மையில், ஹனுமானுக்கு ஒரே மூச்சில் இலங்கைக்குத் தாவி செல்லும் திறமை இருக்காது என்று கருதியே அந்த மலை உதவிசெய்ய வந்தது. இதை அறிந்துகொண்ட ஹனுமான், அந்த உதவியை மறுத்து ‘நான் செல்லும் காரியம் அவசரமானது, என் பிரபு ராமச்சந்திர மூர்த்தியின் உயிர் சம்பந்தமானது’ என்று கூறி, தடையைத் தாண்டிச் செல்கிறார். ஹனுமான் மீது விருப்பம்கொண்ட நண்பனால் இந்தத் தடை உருவானது.

அடுத்து அவர் சந்தித்த தடை, நாக மாதா சுரஸ். அவர் ஒரு கோர அரக்கியாக உருமாறி, விரைந்து வந்த ஹனுமானைத் தடுத்தாள். தன்னைத் தாண்டிச் செல்லும் எவரும் தனக்கு உணவாக வேண்டும் என்று கூறி விழுங்க வந்தாள். அவளை அடக்கவும், தடையைக் கடக்கவும் ஹனுமார் அவளது வாய்க்குள் புகுந்துவிடுகிறார். மீண்டும் காது வழியே வெளியேறிச் சென்றார். உண்மையில், இந்தக் கோர அரக்கியை தேவர்களே உருவாக்கி அனுப்பினார்கள். இலங்கை செல்லும் ஹனுமார் வெற்றி பெறுவாரா என்பதைப் பரீட்சிக்கவே இந்தச் சோதனை அவருக்கு வைக்கப்பட்டது. அதையும் அநாயசமாக ஆஞ்சநேயர் வென்று, தாண்டிச் சென்றார்.

அடுத்து வரும் மூன்றாவது தடைதான் முக்கியமானது, மிக உக்கிரமானது. அந்தக் கடற்புரத்தை காவல் காத்துவரும் `சிம்ஹிகா’ என்னும் கொடிய அரக்கியே ஹனுமாரைத் தடுத்து நிறுத்தி, படாதபாடு படுத்துகிறாள். தன்னுடைய ஆளுகைக்குள் இருக்கும் கடலைத் தாண்டிச் செல்லும் ஹனுமானின் நிழலைப் பிடித்து நிறுத்துகிறாள் அரக்கி. அவளது பிடியில் சிக்காமல் பறந்து செல்கிறார் ஹனுமார். இதனால் கோபமான அரக்கி, அவரின் கொடிய எதிரியாக மாறி, அவரைப் பலவிதங்களில் தடை செய்கிறாள். எந்த நிலையிலும் கலங்காத ஹனுமார், இறுதியில் அவளது வயிற்றைக் கிழித்து கொன்றுவிட்டு, தடைகளைத் தாண்டிச் செல்கிறார். இலங்கை சென்ற ஹனுமார் அன்னை சீதாதேவியைக் காண்கிறார். ராவணனிடம் தூது செல்கிறார். சொல்பேச்சு கேளாத ராவணனின் கொட்டத்தை அடக்க இலங்கைக்கே தீ மூட்டிச் செல்கிறார். இவ்வாறு இவரது இலங்கைப் பயணம் வெற்றியை அடைகிறது. ஆனால், இந்த வெற்றியை அடைய அவர் மூன்றுவிதமான தடைகளை சந்திக்கிறார். அதை மனம் தளராமல் எதிர் நின்று வெற்றியும்கொள்கிறார்.
இப்படித்தான் நாம், நம்முடைய லௌகீக வாழ்விலும், ஒவ்வொரு புதிய முயற்சியிலும் தடைகளைக் காண்கிறோம். நம்முடைய எந்த ஒரு புதிய முயற்சியையும் முதலில் நம்முடைய நண்பர்களோ, சுற்றத்தார்களோ, `வேண்டாம்’ என்று கூறித் தடுப்பார்கள். `உன்னால் முடியாது, இது சிரமமான காரியம்’ என்று இகழ்ந்து பேச ஆரம்பிப்பார்கள். இதைத்தான் ஹனுமார் முதலில் சந்தித்தார், தாண்டினார். அடுத்து நாம் ஆரம்பிக்கும் காரியத்தில் கடவுளே சில சோதனைகளை வைத்துப் பார்ப்பார். இவன் கொண்ட உறுதியில் நிலையாக இருக்கிறானா என்பதே அந்தச் சோதனைக்கான காரணம். அதைத்தான் நாம், `நேரம் சரி இல்லை’, `அதிர்ஷ்டம் இல்லை’ என்றெல்லாம் கூறுகிறோம். இதை எல்லாம் தாண்டித்தான் முன்னேற வேண்டும். இரண்டாவதாக, தேவர்கள் ஹனுமானைச் சோதித்ததும் இப்படித்தான்.

மூன்றாவதாக நம்முடைய முன்னேற்றத்தால் உருவாகும் எதிரிகள் நம்மை நிலைகுலையச் செய்வார்கள். அதைப் பக்குவமாகக் கையாண்டு முன்னேற வேண்டும். அதைத்தான் ஹனுமானும் மேற்கொண்டார். இப்படி முன்னேறும் முயற்சியில் நாம் எதிர்கொள்ள இருக்கும் மூன்று தடைகளைத்தான் ஹனுமார், கடலைத் தாண்டிச் செல்லும்போது சந்தித்தார் என ராமாயணம் நமக்கு அறிவுறுத்தி உள்ளது. ஆகவே, புராணக் கதைகளை வெறும் சுவாரஸ்யக் கதைகளாக எண்ணாமல், அதில் உள்ள நமக்கான பாடத்தையும் கற்றுக்கொள்வோம். தடைகள் வர வரத்தான் நம் முன்னேற்றம் விரைவாகிறது என்பதை உணர்வோம், ஆக, தடைகள் வரட்டும் என்றே எண்ணுவோம். தடைகள் துன்பம் இல்லை. நமது வெற்றியை வழிநடத்தும் கைகாட்டிப் பலகை என்றே எண்ணுவோம்.

Share