இஸ்லாத்தை ஏற்ற தமிழ் சித்தர் யாக்கோபு சித்தர்(Ramadeva siddhar)

இஸ்லாத்தை ஏற்ற தமிழ் சித்தர் யாக்கோபு சித்தர்(Ramadeva siddhar)

இஸ்லாத்தை ஏற்ற தமிழ் சித்தர்
யாக்கோபு சித்தர்(Ramadeva siddhar)
****************************************

மெக்கா நகர மக்களே! நான் ஒரு சித்தன். உங்கள் அரபு நாட்டில் காயகல்ப மூலிகைகள் இருப்பதை அறிந்து, அவற்றைப் பற்றி ஆய்வு செய்து, மருந்துகள் தயாரித்து மனித குலத்தின் நோய் தீர்க்கவே இங்கு வந்தேன். என்னைத் தவறாகக் கருதாதீர்கள். எனக்கு மத வேறுபாடெல்லாம் கிடையாது. நான் எல்லா மதங்களையும் நேசிப்பவன், என்றார் ராமதேவர்.

இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன.இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது. நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யாக்கோபு சித்தரின் வரலாறு, உங்களுக்காக

நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார். இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம். உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார். உலகில் வெம்மை நோயால் பலர் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதிலிருந்து, எப்படிக் கிட்டுகிறது? என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின.

இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார். பூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன. இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க… அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா? என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட… ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார்.குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார்.அன்று முதல் யாக்கோபுவாக islam மதம் மாறினார்.மக்கா நகரத்து மனிதர்கள் யாவருடனும் இன்முகத்துடன் பழகினார்.அங்குள்ள காயகல்ப மூலிகைகளைக்கண்டறிந்து அவற்றை சாதனைக்குப் பயன்படுத்தியதுடன் மற்றவருக்கும் அதன் மகத்துவம் பற்றிஎடுத்துரைத்தார்.மக்கா நகரின் இசுலாமிய மக்களிடையே இரண்டறக் கலந்து அவர்களின் நோயகற்றும் மருத்துவராக இருந்து எல்லா காலங்களுக்கும் பயன்படும்படியான மருத்துவ நூல்களை அராபிய மொழியில் பாடி வைத்தார்.அங்குள்ள நபிகள் நாயகம் சமாதியைத் தொழுது துதித்து வருவதை யாக்கோபுச் சித்தர் வழக்கமாகக் கொண்டு வந்தார். ஒருநாள் ஆகாயம் அதிரும்படியான பெருத்த ஓசை ஏற்பட்டது. அன்பர்கள் அனைவரும் குரானை ஓதித்தொழுத போது யார் கண்ணிலும் படாமல் நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் காட்சி தந்தார். ஆத்ம அநுபவம், தெய்வ நுட்பம் போன்ற உயரிய சாதனைகள் பற்றி நபிகள் நாயகம் யாக்கோபுச் சித்தருக்கு மட்டும் உபதேசித்து மறைந்தார்.

அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா? எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா? உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா?’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது.

மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார். அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது. இதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர். இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது. ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது.

இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார். ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார்.

மாய சித்தர் போகர் இயற்றிய போகர் 7000 பாடலில்
இராமதேவர் அரேபியா சென்ற வரலாறு அதிகம் உள்ளது.

அல்லாவைப் பற்றிய சித்தர் பாடல்:

மூலம்: யாகோபு சித்தரின் யாகோபு சுண்ணகாண்டம் என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடல்.

“ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே” –

#சிவசித்தர்

Share