காமமும் தட்சிணாயண விரதமுறைகளும்

காமமும் தட்சிணாயண விரதமுறைகளும்

காமமும் தட்சிணாயண விரதமுறைகளும்:
*********************************************

பொதுவாழ்வில் ஆண் / பெண் உணர்வுகளானது குறிப்பிட்ட பருவ காலவங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சாஸ்திர விதிகளுடன் தொடர்புபடுத்தி விளக்க முயல்கிறேன். சாஸ்திரம் வகுத்த நம் முன்னோர்கள் எந்த ஒரு விதியைப் பற்றியும் நேரடியாகச் சொல்லவில்லை. காரணத்தை மறைத்து காரியத்தை மட்டும் செய்யச் சொல்லியிருப்பார்கள். இதை வழுவாமல் இப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் விதிமுறையாய் இருக்கும்.

அதுபோலவே நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பருவகால மாற்றத்தை நம் முன்னோர்கள் கணக்கிட்டு, அது சார்ந்த வாழ்வாதார முறைகளை சாஸ்திரமாக வகுத்தனர். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் என்பது சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களைக் குறிப்பனவையாகும். இதன் மொத்தம் 360 பாகைகளை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும்.

இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது எனில், சூரியன் ஒரு ராசியல் இருக்கும்போது அதன் எதிர் நிலையான ஏழாம் பாவத்தில் (180 பாகைகள்) சந்திரன் வரும் காலம் பௌர்ணமியாகும். அப்போது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது முழுமையாகப் பிரகாசிக்கும்.

தமிழ்மாதம் − பௌர்ணமி வரும் நட்சத்திரம்

1. சித்திரை − சித்திரை (சித்ரா பௌர்ணமி)
2. வைகாசி − விசாகம்
3. ஆணி − மூலம்
4. ஆடி − உத்திராடம்
5. ஆவணி − அவிட்டம்
6. புரட்டாசி − உத்திரட்டாதி
7. ஐப்பசி − அஸ்வினி
8. கார்த்திகை − கார்த்திகை (திருக்கார்த்திகை)
9. மார்கழி − திருவாதரை
10. தை − பூசம்
11. மாசி − மகம்
12. பங்குனி − உத்திரம்

மேற்கண்ட நட்சத்திரத்தன்று ஏற்படும் பௌர்ணமி காலத்தில் பூமியில் கிடைக்கும் சக்தியோ ஏறாளம். அத்தகைய அளப்பரிய சக்தியை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அந்தந்த மாதங்களில் அக்குறிப்பட்ட நட்சத்திரங்களின் பெயரில் விரத முறைகளும், விழாக்களும் எடுக்கப்பட்டது.

இது தவிர மகர ராசியான தை மாதம் முதல், மிதுன ராசியான ஆணி மாதம் வரை “உத்திராயணம்” எனவும், கடக ரிசியான ஆடி மாதம் முதல் தணுசு ரிசியான மார்கழி வரை “தட்சிணாயணம்” எனவும் குறிப்பட்டார்கள். காரணம் உத்திராயண காலத்தில் சூரியன் “வடக்கு” நோக்கியும், தட்சிணாயண காலத்தில் “தெற்கு நோக்கியும்” பயணிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் சூரியன், தை மாதத்திலிருந்து ஆணி நோக்கி பயணிக்கும் உத்ராயண காலம் “உஷ்ணம்” மிகுந்தும், ஆடியிலிருந்து மார்கழிவரை பயணிக்கும் தட்சிணாண காலம் “குளிர்ச்சி” மிகுந்து காணப்படும். ஏனெனில், உஷ்ண காலங்களில் சூரியன் பூமிக்கு அருகிலும், குளிர்ச்சியான காலங்களில் சூரியன் பூமியைவிட்டு விலகியும் இருக்கும்.

இங்குதான் பதிவின் காமப் பகுதியே ஆரம்பகிறது. இதற்கும் உடலில் உண்டாகும் காம எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என ஐயம் வரலாம். நம் ஆத்மாவானது ஐவகை அக்கினிகளைக் கொண்டெழுப்பும் தன்மை கொண்டது. அந்த ஐவகை அக்கினிகளே நம் உடலின் வெப்பத்தைச் சீராக்கி சமநிலையில் வைக்கிறது. அவை,

#ஐவகை_அக்கினிகள்:

1. போகாக்கினி (பசியுணர்வு)
2. மோகாக்கினி (மோக உணர்வு)
3. காமாக்கினி (காம உணர்வு)
4. தாபாக்கினி (ஆசையுணர்வு)
5. ஞானாக்கினி (ஞானம்)

ஆன்மாவின் இந்த வெப்பச் சமநிலைக்கும், பூமியில் சூரியனின் பருவகால மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், உத்ராயணமான உஷ்ண காலத்தில் நம் உடலின் வெப்பநிலையானது குறைந்தும், தட்சாயிணாயிணமான குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையானது அதிகரித்தும் காணப்படும். அதாவது நம் ஆத்மாவானது புறத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்போது அகத்தில் வெப்பத்தைக் குறைத்தும், புறத்தில் வெப்பம் குறைந்து இருக்கும்போது அகத்தில் வெப்பத்தை அதிகரித்தும் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கும்.

விசயம் யாதெனில், எப்போது உடலின் வெப்பநிலை ஆத்மாவால் கொண்டெழுப்படுகிறதோ அப்போதெல்லாம் உடலின் காம இச்சை அதிகரிக்கும். குறிப்பாக சூரியன் பூமியைவிட்டு 151 பாகை முதல் 270 பாகை வரையிலான தட்சிணாயின காலம் என்பது புரட்டாசி முதல் மார்கழி வரையிலான “குளிர்காலமாகும்”. இந்த மாதங்களில் புவியில் ஜனிக்கும் உயிரினங்களுக்கு இப்பெருக்க காலமாகும். அதாவது அந்தக் காலங்களில் அதிகப்படியான காம இச்சைகள் ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும்.

குறிப்பிட்டுள்ள நட்சத்திர காலங்களில் ஏற்படும் பௌர்ணமி ஒளியால் பூமியில் அளப்பரிய சக்தி உண்டாக்கும் என மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அச்சக்தியானது நம் உடலின் வெப்ப சக்தியோடு சேரும்போது உடலானது புத்துணர்ச்சியால் கிளர்ச்சியடைந்து வரைமுறையற்ற காமத்தை வெளிப்படுத்தும். அதானாலேயே, புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலத்தில் அதிகப்படியான விரத முறைகளும், விழாக்களும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்படுகிறது. அதாவது #புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் மற்றும் நவராத்திரி / விஜயதசமி நோன்பு, #ஐப்பசியில் தீபாவளிப்பண்டிகை, #கார்த்திகையில் முருகனுக்கு திருக்கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணியதலும், #மார்கழியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை நோன்பும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்பட்டு காம உணர்வுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதுவே நம் முன்னோர்கள் வகுத்த அதிவிஞ்ஞான சாஸ்திரமாகும்.

மேலும் புரட்டாசியானது / ஆண்களுக்கும் மார்கழியானது / பெண்களுக்கும் உரித்தான காலமாகும். அதாவது புரட்டாசியில் ஆணின் உணர்வுகள் வக்கிரமாகவும், மார்கழியில் பெண்ணின் உணர்வுகள் வக்கிரமாகவும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் இருவரின் உணர்வுகள் சமநிலையிலும் இருக்கும். அதனாலேயே புரட்டாசி மாதம் ஆண்களின் விரத காலமாகவும், மார்கழிமாதம் பெண்களுக்கு திருப்பாவை நோன்பு காலமாகவும் பிரிக்கப்பட்டது. இவ்விரண்டு மாதங்களிலும் களத்திரக் (திருமண) காரகரான பெருமாளே பிரதானக் கடவுளாகும், நன்றி!

– கோரக்கர் எழுதிய காம சாஸ்திரம் நூலில் இருந்து

Share