குண்டலினி சக்தியை விழிக்க வைக்கும் உயர்ந்த உன்னத ரகசியங்கள்

குண்டலினி சக்தியை விழிக்க வைக்கும் உயர்ந்த உன்னத ரகசியங்கள்

குண்டலினி சக்தியை விழிக்க வைக்கும் உயர்ந்த உன்னத ரகசியங்கள்…

யோகியின் அடையாளம் என்ன ? என்பதைக் குறித்து கீதை பட்டியலிடுகிறது.

அவையனைத்தும் குண்டலினி யோகிக்கும் பொருந்தும். யாருக்கு குண்டலினி கிளம்பியிருக்கிறது என்று ஒவ்வொருவராகத் தேடிக் கொண்டிருப்பதை விட, நமக்கு குண்டலினி கிளம்ப நாம் என்ன செய்யலாம் ? அதறற்கு நம் முன்னோர்கள் என்னென்ன வழிமுறைகளைச் சொல்கிறார்கள் என்று கவனித்து, அதற்கான முயற்சியை மேற் கொள்வதே உத்தமம். மனம் முழுமையாக ஒரு நிலைப்பட்டு, ஆழ்ந்த நிலைக்குப் போகப் போக எல்லாம் தெரிய வரும். தெய்வீகக் காட்சிகள், வாசனைகள், ருஷி, ஸ்பர்சம், அனாஹத ஒலிகள், போன்ற பல அனுபவங்களைப் பெறுவீர்கள். ஆனால் அதிலே லயித்து விடாமல் மேலும் மேலும் தீவிரமாக சாதனையைத் தொடர வேண்டும். இது தான் இவ்வளவு தான் என்ற முடிவுக்கு வந்துவிடக் கூடாது.

குண்டலினி எழும்பியதற்கு அறிகுறியாக பல தியான நூல்கள் பலவிதமாகச் சொல்லியுள்ளன. அதில் எனக்குத் தெரிந்த சிலவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். மேலே குறிப்பிட்டுள்ளஅனுபவங்கள் எல்லாமே குண்டலினி எழும்பியதைக் குறிப்பவையே. மூலாதாரத்தில் துடிப்பு இருக்கும் போது, மயிர் கூச்செறியும் போது, உட்டியாணா, ஜலந்தரம், மூலபந்தம் போன்றவை தானே வருகையில் குண்டலினி எழுந்து விட்டது என்று உணருங்கள். எந்த முயற்சியும் இன்றி சுவாசம் தானே நின்றாலோ, எந்த சிரமமும் இன்றி கேவல கும்பகம் தானே வந்தாலோ குண்டலினி சக்தி செயல்படுகிறது என்று உணருங்கள். மனதில் உலக எண்ணங்கள் எப்போது இல்லாமல் போகிறதோ, எப்போது நீங்கள்தானாகவே ஓம் என்ற மந்திரத்தை ஜெபிக்கிறீர்களோ, எப்போது பேரானந்தத்தை அனுபவிக்கிறீர்களோ அப்போது குண்டலினி சக்தியானது விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

உங்கள் தியானத்தின் போது இரு புருவங்களுக்கும் இடையில் உள்ள திரிபுடியில் கண்கள் நிலை பெற்று, சாம்பவி முத்திரை செயல்படும் போது குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் சரீரத்தில் பல பாகங்களில் மின் அதிர்வுகள் ஏற்படுகையில், பிராண அலைகள் உள்ளுக்குள்ளே அதிகரிப்பதை உணர்கையில் குண்டலினி கிளம்பி விட்டதை உணருங்கள். தியானத்தின் போது உடலே இல்லாதது போன்ற உணர்வுஏற்படும் போது, உங்கள் கண் இமைகளைத் திறக்க முயற்சித்து முடியாத போது, நரம்புகள் வழியாக மின்சார அலைகள் மேலும் கீழும் பாய்வதை உணரும் போதும் குண்டலினி மேலேழும்பி விட்டதை உணருங்கள்.

நீங்கள் தியானம் செய்கையில் உத்வேகமும், உள்ளுணர்வும் பெறுகையில், இயற்கையின் இரகசியங்கள் ஒவ்வொன்றாக உங்களுக்குத் தானாகவே புலப்படுகையில்,உங்கள் ஐயங்கள் எல்லாம் நீங்கித் தெளிவடைகையில், வேத இரகசியங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெளிவாகப்புரிய வருகையில் குண்டலினி செயல்படுவதை உணருங்கள். உங்கள் உடல் காற்றை விட லேசாகத் தோன்றும் போது, குழப்பமான சூழலிலும் மனம் சமநிலையில் நிற்கும் போதும், அபரிதமான சக்தி உடலில் பெருகியிருப்பதைஉணரும் போதும் குண்டலினி விழித்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள். பல்வேறு ஆசனங்கள், மற்றும் யோக நிலைகளை நீங்கள் எந்தவித சோர்வும் சிரமும் இன்றி செய்யும் போதும், உங்கள் அறிவின் சக்தி பெருகி இருப்பதை உணரும் போதும், உயர்ந்த கவிதைகளை உங்களால் இயற்ற முடிகின்ற போதும் குண்டலினி விழித்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள்.

ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து, ஒவ்வொரு விதமான அனுபவங்களையும் பெற்று புருவ மத்தியில் ஆக்ஞாவில் நுழையும் போது பிரம்மானந்தத்தைஅனுபவிப்பீர்கள். உங்களுக்கும் ப்ரம்மத்திற்கும் இடையே உள்ள வேற்பாட்டைப் பற்றிய லேசான அனுபவமேஎஞ்சி நிற்கும். அதையும் கடந்து சகஸ்ராரத்தை அடைந்து விட்டால் யோகி நிர்விகல்ப ஸமாதியை அடைந்து விடுவார். இரண்டற்ற நிலை ஏற்படும். அனைத்து பேதங்களும் சம்ஸ்காரங்களும்மறையும். பரிசுத்த நிலை உண்டாகும். கர்ம வினைகள் அழியும். இதுவே மிகமிக உயர்வான, மேலான அஸம்ப்ரக்ஞாத ஸமாதியாகும். குண்டலினி சிவனுடன் ஐக்கியமாகிவிடுகிறது.

தன் பிறகு யோகி விரும்பினால் தொண்டை மத்தியில் உள்ள சக்கரத்திற்கு இறங்கி வந்து சீடர்ர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, லோக ஷேமத்தில் ஈடுபடலாம். இந்தப் பூரண யோகியானவர் எட்டு வகை சித்திகளையும் பெற்றவராவார். மேலும் இதனால் யோகியானவர் 26 வகையான சக்திகளைப் பெறுவார் என்று சொல்லப்பட்டுள்

1. பசிதாகத்தில் இருந்து விடுதலை.
2. சீத உஷ்ணத்தில் இருந்து விடுதலை.
3. ராக துவேஷத்திலிருந்து விடுதலை.
4. தூரதர்ஷன், தூரதிருஷ்டி.
5. தூர சிரவணம், தொலைவில் உள்ளதைக் கேட்டல், தூர சுருதி, தூரப்ரவசனம்.
6. மனோ ஜயம், மன அடக்கம்.
7. காமரூபம், யோகி தான் விரும்பிய வடிவத்தை எடுக்க முடியும்.
8. பரகாயப் பிரவேசம். அவர் பிறரது உடலில் புக முடியும். இறந்தவனை உயிர்ப்பிக்க முடியும்.
9. தேவர்களைத் தரிசித்து அவர்களோடு விளையாடி மகிழ முடியும்.
10. விரும்பும் போது மரணமடைய முடியும்.
11. விரும்புவதைப் பெற முடியும்.
12. இறந்த, நிகழ், எதிர் கால அறிவு.(த்ரிகால ஞானம்)
13. இரட்டை உணர்வுகளைக் கடத்தல்.
14. வாக்கு சித்தி.
15. ரஸவாதம்.
16. ஒரே பிறவியில் தன் எல்லா கர்மங்களையும் போக்க, தான் விரும்பும் பல வடிவங்களை எடுக்க முடியும்.
17. தவளை போலத் தத்திச் செல்ல முடியும்.
18. நோய்களை குணப்படுத்துதல்.
19. முந்தைய பிறவியைப் பற்றிய அறிவு.
20. நட்சத்திர மண்டலம், கிரகங்கள் பற்றிய ஞானம்.
21. சித்தர்களை தரிசிக்கும் ஆற்றல்.
22. இயற்கையை வெல்லுதல்.
23. தாம் விரும்பும் இடத்துக்கு நொடியில் செல்லுதல்.
24. அனைத்தையும் பகுத்தறியும் திறன்.
25. வாயு சித்தி.
26. புதையல்களை அறியும் ஆற்றல்.
குண்டலினி கிளம்பி ஐக்கியம் நிகழ்ந்த பிறகு இது போலப் பல அற்புத சக்திகள் யோகிக்கு கை கூடுகின்றன என்று சொல்லப்பட்டுள்ளது.

மூலாதாரம் சகல நாடிகளையும் முடிச்சிட்டு வைத்திருக்கும் இடமாகும்.இங்கிருந்தே சுழுமுனை நாடி மேல் நோக்கி ஆக்ஞை வரை செல்கிறது. இந்த ஆக்ஞை இரு புருவ மத்திக்கும் உள்ளே இருக்கிறது. இதற்கு மேலே உள்ளது மீதானம். இதனை விந்துத்தானம் என்றும் கூறுவார்கள். அதற்கும் மேலே பிரமரந்திரத்தானம்.

மூராதாரத்திலிருந்து ஓவ்வொரு ஆதாரமாக கடந்து குண்டலினியானது சகஸ்ராரத்தை அடைந்து அங்கு வெளிப்படும் சிவத்தினை காண்பார்கள் யோக சாதகர்கள். ஓவ்வோரு ஆதாரத்தை கடப்பதுவும் ஓவ்வோரு உலகத்தை கடப்பது போலத்தான் இருக்கும். இதையே ஏழு லோகங்கள் என்று கூறுவார்கள்.

இதில் துணைச்சக்கரங்களையும் சேர்த்து ஈரேழு பதினாழு லோகங்கள் என்பதுவும் உண்டு. ஒவ்வோரு சக்கரங்களிலும் அடங்கியுள்ள தத்துவங்களைக் கருத்தில் கொண்டு இருநூற்றி இருபத்திநான்கு புவனங்கள் என்றும் சொல்வார்கள்.

நாசி நுனி, நாக்கு நுனி, உள் மேவாய்க்கட்டை, நாக்கின் நடுவிடம், நாக்கின் அடியிடம் இந்த இடங்களில் மனதை நிறுத்தி சம்யமம் செய்தால் சந்தேகம் நீங்கும், பயம் தொலையும், விவேகம் விளையும், சித்தம் திடப்படும் என்று யோகநூல்கள் கூறுகின்றன. இரு புருவமத்திக்கு உள்ளே புருவநடுஸ்தான்த
ை விந்துஸ்தானம் என்றும், நெற்றிக்கண் , திருச்சிற்றம்பலம் என்றும் யோகியர்கள் கூறுவார்கள். அதுவே ஆன்மா(விந்து) என்பார்கள். எனவே அந்த இடத்தில் மனதை வைத்து தியான யோகத்தில் அமர்ந்தால் ஆத்மதரிசனம் கிட்டும் என்பார்கள்.
உறங்கும் போதுகூட இருகால்களையும் நீட்டி, இடதுகையை தலைக்கு வைத்து,இடதுபுறம
ாக படுத்துக்கொண்டு வாசியை மெதுவாக இழுத்துவிட்டுக் கொண்டே புருவ மத்தியில் மனதை வைத்துக் கொண்டு படுத்து உறங்க பழகிக் கொள்ள வேண்டும் என்கிறார்கள்.

யோகிகள் இதை ”சிவயோக நித்திரை” (தூங்காமல் தூங்கும் நிலை) என்பர்.

ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிக்கண் டிடவோடிப்
பண்ணாமல் நிற்பது பார்க்கலுமாமே. திருமந்திரம் – 587.

லலாடஸ்தானமென்னும் நெற்றிக் கண்ணில் மின்னல் போலத் தோன்றும் ஒளியைக் குறைவின்றி பார்த்து, அதனோடு உணர்வு ஒன்றி இருப்பின் பிற முயற்சிகள் யாதும் செய்யாமலேயே அந்த ஒளியாகிய ஜோதிமயமான சிவதரிசனத்தில் திளைத்திருக்கலாம் என்று கூறுகிறார்.

உடலை உணர்கின்ற மனிதர்கள் உயிரை உணர்வதில்லை, அப்படியே உயிரை உணர்ந்த ஒருசிலரும் மூலமான சிவனை உணர்வதில்லை, அந்த சிவனை அறிந்திட்ட சிலரும் புருவமத்தியில் தியானித்தால் ஆக்ஞையில் சிவனைக் காணலாம் என்பதை அறியாமல் உள்ளனர்.

இதையே ” ஒரு பொழுதுன்னார் உடலோடுயிரை
ஒரு பொழுதுன்னார் உயிருட்சிவனை
ஒரு பொழுதுன்னார் சிவனுறை சிந்தையை
ஒரு பொழுதுன்னார் சந்திரப்பூவே. திருமந்திரம் – 588
என்கிறார்.

மணத்து விளக்கினை மாண்பட ஏற்றிச்
சினத்து விளக்கினை செல்ல எருக்கி
அனைத்து விளக்குந் திரியொக்கத் தூண்ட
மனத்து விளக்கது மாயா விளக்கே. திருமந்திரம் – 589.

எண்ணாயிரத் தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதனை கண்டறிவா ரில்லை
உண்ணாடி உள்ளே ஒளிபெற நோக்கிடில்
கண்ணாடி போலக் கலந்து நின்றானே. திருமந்திரம் – 590.

கோபமென்னும் நெருப்பை தவிர்த்து மேல்மாடமாகிய ஆக்ஞா ஸ்தானத்தில் ஏற்ற வேண்டிய தியான விளக்கை ஏற்றிய பிறகு கீழ் நிலையிலுள்ள மற்ற விளக்குகளும் அனைந்து போகாதபடிக்கு எல்லாவற்றிலுந் திரியை ஒருசேரத் தூண்டிவைத்தால் ஆக்ஞா ஸ்தானத்தில் ஒளிரும் விளக்கது சிவஜோதி விளக்கே.

மேற்கூறியவாறு தியானம் செய்பவர்களுக்கு, பல்லாயிரம் ஆண்டு தவம் இருந்தர்க்கு காணக்கிடைக்காத சிவன், கண்ணாடியில் தெரியும் காட்சி போலதெளிவாகப் புலப்படுவார்.
அதாவது உயிருக்குள் உயிராய் இருக்கும் நிலை புலப்படும்.

நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கு அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தான்இல்லை
தேட்டமும் இல்லை சிவன் அவன் ஆகலாம். திருமந்திரம் – 591

கண்களிரண்டையும் புருவமத்தியில் வைத்து தியானித்தால், தேகம் வாடாது, உடல் அழியாது, பிராணன் இயங்காது, உலக உணர்வு அற்றுப் போகும், மலங்கள் நீங்கி சிவனாகவே ஆகலாம்.
பிராணயாமம் செய்து புருவமத்தியில்(நாசி நுனியில்) தியானம் செய்து, மேல் நோக்கி செல்லும் நாடிகள் இடை, பிங்கலை மூலம் அசைவற்று இருப்பவர்களுக்கு மரண பயம் கிடையாது. இதையே…

நயனம் இரண்டையும் நாசிமேல் வைத்திட்டு
உயர்விழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரறா நாடியே தூங்க வல்லார்க்கு
பயனிது காயம் பயம் இல்லைதானே. திருமந்திரம் – 592. என்கிறார்.

ஆக்ஞா என்றால் அளவில்லாத சக்தி, ஆளுமை, கட்டுப் படுத்தும், தலைமை, அதிகாரமுள்ள எனப் பல பொருள் கொள்ளப் படுகிறது. இது ஒரு 6 வது உயர் நிலைச் சக்கரம். இந்தச் சக்கரம் வலுவடைந்தால் உடல், மனம், ஆன்மா மூன்றும் தூய்மையடைந்துவிடும். தேஜஸ் உண்டாகும். வசீகரம் ஏற்படும். எல்லாம் ஒன்றாகத் தோன்றும். அன்பு பெருகும். தீர்க்க தரிசனம் ஏற்படும். கூடுவிட்டு கூடுபாயும் சித்தி கைகூடும். பிற ஐந்து ஆதாரங்களைக் கடந்தவர்கள் மீண்டும் கீழ்நிலைக்குச் செல்லும் வாய்ப்பு உள்ளது. ஆனால் ஒருமுறை ஆறாவது ஆதாரத்தில் நுழைந்தவர் மூண்டும் கீழ்நிலை ஆதாரங்களின் ஆதிக்கத்திற்கு செல்வதில்லை. இது இடைகலை, பிங்கலை நாடிகளுக்கு அப்பாற்பட்டு நேரடியாக சுழுமுனையோடு தொடர்பு கொணடுள்ளது. இந்த ஆதாரம் முழுமையாகச் செயல்படும் ஞானிகளின் உடலும், மனமும் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அவர்களையே பரமஹம்சர் என்பார்கள். அவர்கள் நினைத்த காரியமெல்லாம் சித்தியாகும். விஞ்ஞான ரீதியாக நம் மூளையிலுள்ள பீனியல் சுரப்பி இந்த ஆக்ஞாவோடு தொடர்புகொண்டுள்ளது. பீனியல் சுரப்பி ஒளியினால் தூண்டப்படும் தன்மையுடையது. ஆறாவது ஆதாரம் வலுப்பெற்ற ஞானியர்க்கு தலையைச்சுற்றி ஒளிவட்டம் தோன்றும். இந்த ஒளி பீனியல் சுரப்பியைத் தூண்டி அதன் செயல்பாடுகளை வலிமைப்படுத்தும். 6 வது மற்றும் 7வது ஆதாரங்கள் ஓம் என்ற மந்திரத்தால் வலுப்பெறும். முழுமையாக வலுப்பெற்றவர்களுக்கு உச்சாடனம் தேவையில்லை. சதாகாலமும் அவர்கள் உடலில் இந்த மந்திரம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும்.ஒரு சிலரைத் தவிர, 35 வயதுக்கு மேல்தான் இந்த ஆதாரம் வலுப்பெறும். விசுத்தியில் தூய்மையடந்து ஆன்மா, கர்ம வினைகள் அகன்று ஆக்ஞாவில் நுழைந்தவுடன் பரமாத்மா எனும் கடலில் கரையத் துவங்கும்.

நான்கு இதழ்களை உடையது மூலாதாரம், ஆறு இதழ்களை உடையது சுவாதிட்டானம், பத்து இதழ்களை உடையது மணிபூரகம், பன்னிரண்டு இதழ்களை உடையது அனாகதம், பதினாறு இதழ்களை உடையது விசுத்தி, இரண்டு இதழ்களை உடையது ஆக்ஞை இந்த ஆறு ஆதாரங்களிலிருந்து தியானித்தால் இறைவனின் திருவடியைக் காணலாம்.

பன்னிரண்டு கலைகளுடன் கூடிய சூரியமண்டலம், பதினாறு கலைகளுடன் கூடிய சந்திரமண்டலம், பிருதிவி முதல் நாதம் ஈராறாகச் சொல்லப்பட்ட முப்பத்தாறு தத்துவங்கள் ஆகிய இவைகளுக்கு மேலாகப் பராசக்தியானவள் வீற்றிருந்தருளுவாள். சிவபிரான் அதற்கு மேலாக தோன்றுவான். அதுவே விமலனுக்கு இடமாகும். இறைவன் மேகத்துக்கும் கற்பக விருட்சத்துக்கும் ஒப்பாக நின்று பிரிதிப் பிரயோஜனம் கருதாது, தான், நான், நீ என்னும் மூவிடப் பெயர்களும், அவன், அவள், அது என்னும் திணை பால் பெயர்களும், பெயர் தன்மை ஆறினையும் அருள்கின்றான்.

பிரணவத்தை எழுப்பி ஆறு ஆதாரங்களையும் குருவினது அருளால் சோதனை செய்தால், வழிபாடு செய்ய இயைபு உண்டாகும். மூலாதாரம் முதல் வழிபாடு செய்தால் சிவபோகம் விளையும்.

தூல உடம்பு அழியும் உடம்பாகும். சூக்கும உடம்பு உயிருடன் செல்லும் உடம்பாகும். தத்துவமாகிய உடம்புக்கு அத்துவாக்கள் ஆறும் அங்கங்கள் ஆகும். விசுத்தித் தானத்தில் வழிபடும் அறிவே, தூய அறிவாய்ச் சிவ அறிவுள் அடங்கி விளங்கும்.
– திருமூலர்.

இதை ஆதி சங்கரர் வேறு விதமாகச் சொல்லுவார்.
”க்ஷிதௌ ஷட்பஞ்சாசத்விஸமதிக பஞ்சாசதுதகே
ஹூதாசே த்வாஷ்ஷ்டி; சதுரதிக பஞ்சாசதநிலே |
திவித்விஷ் ஷட்த்ரிம்சத் மநஸிச் சது; ஷ்ஷ்டிரிதியே
மயூகா; தேஷாம்ப்யுபரி தவ பாதாம்புஜயுகம்” ||

ஹே பரதேவதையே !சாஸ்திரங்கள் சொல்லுகின்ற கிரணங்களான ப்ருதிவி தத்துவமான மூலாதாரத்தில் 56ம், ஜல தத்துவமான மணி பூரகத்தில் 52ம், அக்னி தத்துவமான சுவாதிஸ்டானத்தில் 62ம், வாயு தத்துவமான அநாஹதத்தில் 54ம், ஆகாச தத்துவமான விசுத்தியில் 72ம், மனம் என்ற தத்துவமான ஆக்ஞாவில் 64ம் ஆக மொத்தம் 360 கிரணங்களுக்கெல்லாம் மேலானதான சகஸ்ரதள கமலம் என்று சொல்லப்படுகின்ற ப்ரம்மாந்த்ர சக்கரத்திற்கு நடுவிலிருக்கும் சந்திர பிம்ப ரூபமான பைந்தவ ஸ்தானத்தில் உன்னுடைய இரண்டு பாத கமலங்கள் விளங்கி வருகின்றன.
அதாவது நான்கு இதழ்கள் கொண்ட தாமரை புஷ்பத்தில் வ, ல, ஷ, ஸ என்ற நான்கு அக்ஷர உருவங்களோடு உள்ள மூலாதாரத்தில் தேவியினுடைய கலைகள் 56.

ஆறு இதழ்கள் கொண்ட தாமரை புஷ்பத்தில் ப, ப, ம, ய, ர, ல என்ற ஆறு அக்ஷர உருவங்களோடு உள்ள ஸ்வாதிஷ்டானத்தில் தேவியினுடைய கலைகள் 62. நாபிக் கமலத்தில் பத்து இதழ்கள் கொண்ட தாமரை புஷ்பத்தில் ட, ட, ண, த, த, த, த, ந, ப, ப என்ற பத்து அக்ஷர உருவங்களோடு உள்ள மணி பூரகத்தில் தேவியினுடைய கலைகள் 52. இருதய ஸ்தானத்தில் பன்னிரு இதழ்களோடு கூடிய தாமரை புஷ்பத்தில் க, க, க, க, ங, ச, ச, ச, ச, ஞ, ட, டஎன்ற பன்னிரு அக்ஷர உருவங்களோடு உள்ள அநாஹதச் சக்கரத்தில் தேவியினுடைய கலைகள் 54. கண்ட ஸ்தானத்தில் பதினாறு இதழ்கள் கொண்ட தாமரை புஷ்பத்தில் உயிரெழுத்துகள் என்கிற பதினாறு அக்ஷர உருவங்கள் உள்ள விசுத்தியில் தேவியினுடைய கலைகள் 72. புருவ மத்தியில் இரண்டு இதழ்கள் கொண்ட தாமரை புஷ்பத்தில் ஹ, க்ஷ என்ற இரண்டு அக்ஷர உருவம் உள்ள ஆக்ஞாவில் தேவியினுடைய கலைகள் 64. ஆக மொத்தம் 360 கலைகள். இந்த 360 கலைகளையும் ஒன்றாகக் கொண்டு சகஸ்ரதள கமலத்தில், அதாவது தேவியினுடைய பாதங்கள் உள்ள பிரம்மரந்தர மத்தியில் ஜோதிப் பிழம்பாக தேவி இருக்கிறாள் என்பதை நாம் அறிந்து கொள்ளும் விதமாக ஆதி சங்கரர் பிரகடனப்படுத்துகிறார்.

இந்த கலைகள் 360வதும் பூர்த்தியான சாதகன் நிலை கர்ம பூமியில் உள்ள மனிதர்களைப் போல் அல்லாமல், பரப்ரம்ம சொரூப நிலையை அடைந்து விடுகிறான். அதாவது தானே பரதேவதையாக அல்லது பரம்பொருளாக ஆகி விடுகிறான். அந்நிலையையே சத்து சித்து ஆனந்தம் என்கிறார்கள். நம் சரீரத்தில் முதுகெலும்பை மேரு தண்டமாகக் கொண்டு, இடகலை, பிங்கலை, சுழுமுனை நாடிகள் திகழ்கின்றன. அதன் உச்சியில் சிகரத்தில் சத்து பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. சத்து என்றால், எந்த வஸ்துவினாலும் வாதிக்கப்படாமல் காலத்திரையத்திலும் ஏக ரூபமாய் விளங்குவது எதுவோ, அதுவே சத்து. சித்து என்றால், எந்த வஸ்து சாதனாந்தரங்களை அபேட்சியாமல் தானும் தோன்றிக் கொண்டு, தன்னிடத்தில் ஆரோபிக்கின்ற சர்வ பதார்த்தங்களையும் தோற்றுவிக்கின்றதோ அதுவே ஸித்து. ஆனந்தம் என்றால், முக்கியமாய், நிரூபாதிகமாய் பிரதிசயமாகிய ஸ்வரூபமே ஆனந்தம் எனப்படும்.

அதாவது இடகலை நாடி மேரு தண்டத்தின் இடப்பக்கத்தில் வெள்ளிய சந்திரப் பிரகாசம் உடைத்ததாய், அமிர்தமயமாய் சக்தி ஸ்வரூபமாகிய ஸ்திரீ ரூபத்தில் அமைந்துள்ளது. பிங்கலை நாடி மேரு தண்டத்தின் வலப்பக்கத்தில் சூரியப் பிரகாசம் உள்ளதாய் புருஷரூபம் உடையதாய் அமைந்துள்ளது. சுழுமுனை நாடி புருவ நடுவில் அக்னி சொரூபம் உடையதாய் சகல தேஜஸோடு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த சுழுமுனை நடுவில் இச்சா ஞானக் கிரியாத்மகமாய் கோடி சூர்யப் பிரகாசமாய் சுயம்பு லிங்கம் உள்ளது. அதன் மேலே சிவாத்மகமாய் உள்ள பிந்து நாத ஸ்வரூப மாயாபீஜம் இருக்கிறது. அதன் மேல் குண்டலினி சக்தியானது ரத்த விக்ரஹ ஸவரூபமாகிய தேவியோடு இரண்டறக் கலந்து பிரகாசித்துக் கொண்டிருக்கும். இதுவே சத்து ஆகும். ஆதி சங்கரர் சிவயுவதி என்ற பதத்தை பாவனை செய்து சித்தையும், ஆனந்தத்தையும் சத்தோடு இணைக்கத் தூண்டுகிறார். அதில் சித்தையும் ஆனந்ததையும் சிவமாகவும், சக்தியாகவும் பாவனை செய்து சத்தால் உணரச் சொல்கிறார். ஏனென்றால் சித்தையும், ஆனந்தத்தையும் சத்துதான் உணர முடியும் என்பதே கோட்பாடு.

மநஸ்த்வம் வ்யோமத்வம் மருதஸி மருத்ஸாரதிரஸி
த்வமாப; த்வம் பூமி; த்வயிபரிணதாயாம்
நஹிபரம் | த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விச்வ்வபுஷா சிதாநந்தாகாரம் சிவயுவதி பாவநே பிப்ருஷே. …

Share