சுவஸ்திகம் என்பது என்ன?

சுவஸ்திகம் என்பது என்ன?

சுவஸ்திக் எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் சுவஸ்திகம் என்னும் சின்னம் உலகின் பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது சமய நம்பிக்கைகளுடனும் தத்துவங்களுடனும் தொடர்பு கொண்டது. இதில் இரண்டு கோடுகள் ஒன்றுக்கொன்று குறுக்காக அமைந்து நான்கு முனைகளிலும் 90 டிகிரியில் வலது பக்கம் வளைந்த சமமான நான்கு கோடுகள் உள்ளன.
சிந்துச் சமவெளி நாகரிகத்தில் கிடைத்த பொருட்களில் சுவஸ்திகம் காணப்படுகிறது. உலகின் பல நாகரிகங்களிலும் இதற்கு இடம் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழ்த்திசை நாடுகள், ஜப்பான், சீனா, மத்தியத் தரைக்கடல் நாடுகள், ஐரோப்பா, வட அமெரிக்கா ஆகிய இடங்களில் சுவஸ்திகச் சின்னம் கிடைத்துள்ளது.
வடமொழியில் சுவஸ்திகா என்பது நலத்தைக் குறிக்கும். சீன, ஜப்பான் மொழிகளிலும் வெவ்வேறு அர்த்தத்தில் உள்ளது. ஜெர்மனியின் நாஜி கட்சியின் சின்னமாகவும், கொடியிலும் சுவஸ்திக் பொறிக்கப் பெற்றது. சுவஸ்திகம் இந்து, புத்த, ஜைன மதங்களில் இடம் பெற்றிருக்கிறது. இந்து மதத்தில் பிரம்மாவின் நான்கு முகங்களாகவும், நான்கு திசைகளைக் குறிப்பதாகவும் வருகிறது. புத்த மதப் புத்தகங்களின் ஆரம்பத்தில் சுவஸ்திக் முத்திரை இருக்கும்.
ஜைன சமயத்தில் சுவஸ்திகம் முக்கிய சின்னமாகவும், எட்டு மங்கலங்களில் ஒன்றாகவும் கலந்துள்ளது. ஜைனர்களின் ஏழாவது தீர்த்தங்கரரான சுபார்சுவ நாதரின் சின்னமாக விளங்குகிறது. சுவஸ்திகம் இல்லாத பூசைகளை ஜைன வீடுகளில் காணவே முடியாது.
சுவஸ்திகத்தின் ப்ளஸ்(+)-ல் உள்ள இரு கோடுகளும் இல்லறம் மற்றும் துறவறத்தைக் குறிக்கும். இரு கோடுகளும் சந்திக்கும் புள்ளி கொல்லாமையைக் குறிக்கும். மற்ற நான்கு கோடுகளும் எல்லையற்ற அறிவு, எல்லையிலாக் காட்சி, அளவில்லாத ஆற்றல், அளவற்ற இன்பம் ஆகியவற்றைக் குறிக்கும். இந்த நான்கு குணங்களை மனித உயிர், தன் அருந்தவப் பயனால் பெற்று, வினைகளை வென்று, தீர்தங்கரர் ஆக மாறும். இது அருகப் பெருமான் அடைந்த குணங்களின் சின்னமாகும்.
உயிர், அதனுடைய வினைகளைப் பொருத்து, தேவ கதியாகவும், மனித கதியாகவும், விலங்கு கதியாகவும், நரக கதியாகவும் சுற்றிச் சுற்றிப் பிறக்கிறது. தீய வினைகள் குறையக் குறைய பிறவியின் தரமும் உயரும்.
எனவே மனிதனின் எல்லாச் செயல்களும் நல்லதாகவும் அறநெறியுடனும் இருக்க வேண்டும். நற்காட்சி, நல்ஞானம், நல்லொழுக்கம் ஆகியவற்றைக் கடைபிடிக்க வேண்டும். இறைவன், ஆகமம் மற்றும் குரு மீது நம்பிக்கையும் பக்தியும் வைத்து, இதனால் முற்றுமுணர்ந்த நிலையை அடைந்து, மீண்டும் பிறவா வீடுபேறை அடையலாம் என்கிறது ஜைனம். இதனை அறிவுறுத்துவதே சுவஸ்திகம் ஆகும்.

Share