திருமந்திரம் – 147

திருமந்திரம் – 147

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்

வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

*விளக்கம்:* திருவருளால் திருவடியுணர்வால் அடியேன் பெற்ற இறவாப் பேரின்பம் இவ்வையகம் பெற்று இன்புறுமாக. செந்நெறிச் செல்வர்களாகிய நற்றவத்தான் உயர்ந்தோர், இடையறாது பெருங் காதலால் பற்றி நின்ற விழுமிய முழுமுதற் சிவம் மறைப்பொருளாகும். அப்பொருளினை எய்தும் மெய்நெறி சொல்லிடின், ஊனாகிய நெஞ்சத்திடத்து ஓசை அருவாய் நிற்கும். அதன்பின் ஆருயிரின்கண் அவ்வோசை உணர்வுருவாய்த் திகழும். அம் மந்திரம் செந்தமிழ் நான்மறைச் ‘சிவசிவ’ இந்தத் தனிப்பெருந் தமிழ்மறையினை ஆருயிர் இடையறாது அழுந்த அழுந்தக் கணிக்கக் கணிக்கத் திருவடியில் தலைக்கூடும். ஊன் நெஞ்சம் – ஆகுபெயர். உருவால் வரி அருவாம் ஓசையுணர்வின், உருவால் உயிரின்பாம் ஓர்.

Share