தும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை

தும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை

தும்பைப்பூ ஈசனுக்குப் பிரியமான மலரான கதை! –

தும்பைப்பூ

ஈசனுக்கும் மிகவும் உகந்த மலர்கள் கொன்றையும் தும்பையும்.

ஒருமுறை தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த தும்பை என்பவள், சிவபெருமானை நோக்கி தவமிருந்தாள். மனப்பூர்வமான பக்தியுடன் தவம் செய்த தும்பைக்கு அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், அவளுக்கு தரிசனம் கொடுத்ததுடன், ‘உனக்கு வேண்டும் வரம் என்ன?’ என்று கேட்டார். சிவபெருமானை பிரத்யட்சமாக தரிசித்துவிட்ட பதற்றத்தில் இருந்த தும்பை, ‘ஐயனே, நின் திருமுடியின்மேல் என் திருவடி இருக்கவேண்டும்’ என்று கேட்டுவிட்டாள். ஈசனும் அப்படியே வரம் அருளினார். அதற்குள் தான் சிவபெருமானைப் பற்றி அபசாரமாகப் பேசிவிட்டதை அறிந்துகொண்ட தும்பை, ‘ஐயனே, எம்பெருமானே! தங்களை நேரில் தரிசித்த பதற்றத்தில் நாம் தவறாகப் பேசிவிட்டேன். என்னை மன்னித்து அருள்புரியுங்கள் பிரபு’ என்று பிரார்த்தித்தாள்.

கருணைக் கடலான சிவபெருமான் மென்மையாகப் புன்னகைத்தபடி, ‘தும்பையே, உன் பக்தியின் பெருமையை விவரிக்க முடியாது. நீ பூவாகப் பிறந்து என் திருமுடியை அலங்கரிப்பாய்’ என்று அருள்புரிந்தார். அது முதல் ஈசனுக்கு ஐந்து விரல்களைப் போன்ற இதழ்களைக் கொண்ட தும்பைப் பூ இறைவனுக்கு மிகவும் பிரியமானதாகிவிட்டது.

இறைவனின் கருணையைப் பெற்று, முக்தி நிலை அடையவேண்டுமானால், நம்முடைய கர்மாக்கள் அனைத்தையும், பூக்களை சமர்ப்பணம் செய்வது போல இறைவனுக்கே சமர்ப்பித்துவிடவேண்டும். எப்படி சமர்ப் பிப்பது?

‘பரமசிவனே, என்னுடைய மனம், தாமரை போன்ற உமது திருவடிகளிலும், என் வாய் உமது புகழைப் பேசுவதிலும், இரு கைகளும் உமக்கு அர்ச்சனை செய்வதிலும், காதுகள் உமது மகிமையைக் கேட்பதிலும், கண்கள் உம்முடைய திருமேனி அழகிலும், புத்தியா னது உம்மை தியானிப்பதிலும் நிலைபெறட்டும்’ என்று ஆதிசங்கரர் குறிப்பிடுவது போல் நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஈசுவரனுக்கே அர்ப்பணம் செய்துவிட்டால், நாம் அனைத்துத் துன்பங்களில் இருந்தும் விடுபடலாம்.

குறிப்பாக இறைவனின் திருவடி தரிசனம் என்பது பிறவிப் பிணி தீர்க்கும் அருமருந்தாக அமையும். திருவடிகளின் மகிமைகளை விவரிக்கவே முடியாது. பக்தியினால் சிவனாரின் திருவடிகளை சிக்கென்று பற்றிக்கொண்டால், முக்தி நிச்சயம்.

நம்முடைய கர்மபலன்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றதும், நாம் எதை ஈசனுக்குக் காணிக்கையாகத் தருவது? ஆதிசங்கரர் நம் மனமே சிறந்த காணிக்கை என்கிறார்.

‘மலையில் உறைபவரே, உம் கையில் பொன்மலை இருக்கிறது. அருகில் செல்வத்துக்கு அதிபதியான குபேரனும், கற்பக விருட்சம், காமதேனு, சிந்தாமணி ஆகியவையும், திருமுடியின் மேல் குளிர்ந்த கிரணங்களைக் கொண்ட சந்திரனும், உம் இரண்டு திருவடிகளில் அனைத்து மங்களங்களும் நிலைத்திருக்க, எளியவனாகிய நான் எந்தப் பொருளைத்தான் உமக்குக் காணிக்கையாக்க முடியும்? என் மனமே உமக்கான காணிக்கையாக அமையட்டும்’

ஆம், தூய்மையான பக்தியினால் நிரம்பப்பெற்றிருக்கும் நம் மனமே ஈசனுக்கு சிறந்த காணிக்கையாகிறது.

செய்யும் செயல்கள் அனைத்தையும் ஈசனுக்கு அர்ப்பணித்து, ஈசனின் திருவடி தரிசனம் பெற்று, நம் தூய மனதைக் காணிக்கையாக்கிட அடிப்படையான தேவை தூய பக்தி ஒன்றுதான். அப்படிப்பட்ட தூய பக்தி இருந்தால் நம்முடைய குறைகள் எல்லாம் நீங்கிவிடும்.

சிவபெருமானின் மகிமைகளைப் போற்றும் சிவானந்த லஹரி, நம் உள்ளத்தில் நிலைபெற்றிருக்கவேண்டும் என்றும் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

‘சம்புவாகிய ஈசனே, உமது திவ்விய சரிதம் என்னும் புனித நதியினின்றும் பெருகி வந்து, பாவங்களாகிய புழுதியை அடித்துச் செல்வதாகவும், புத்தியென்னும் வாய்க்காலின் வழியாகப் பாய்ந்து சென்று, இந்த உலக வாழ்க்கையாகிய பிறவிச் சுழலில் ஏற்படும் பெரும் துன்பங்களைப் போக்கி, அமைதியை அளிப்பதாகவும், என் உள்ளத்தில் வந்து தேங்கி நிற்பதாகவும், உன் சிவானந்த வெள்ளம் எப்போதும் வெற்றியுடன் திகழட்டும்’…🔥

Share