பிரபஞ்ச சக்தியின் மூலம் நினைத்ததை அடைய

பிரபஞ்ச சக்தியின் மூலம் நினைத்ததை அடைய

பிரபஞ்ச சக்தியின் மூலம் நினைத்ததை அடைய விரும்பும் ஒவ்வொருவரும் அந்த சக்திகளை மேலே வர விடாமல் தடுத்துப் புதைக்கும் மூன்று மனநிலைகளை முதலில் மனதில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மூன்றும் உள்ள வரை பிரபஞ்ச அற்புதங்கள் நம் வாழ்வில் நிகழ வாய்ப்பேயில்லை. அவை – அவநம்பிக்கை, அவசரம், அமைதியின்மை.

அவநம்பிக்கை:

புலன்களின் அறிவுக்கு எட்டாத சக்திகள் உண்டு என்பதாலும், நாம் ஆதாரங்கள் நிறைய பார்த்திருக்கிறோம் என்பதாலும் பிரபஞ்ச அற்புதங்கள் உண்மையிலேயே உள்ளதா என்று அவநம்பிக்கை கொள்ளவே தேவையில்லை.

அவசரம் :

விதையை விதைத்து விட்டு தண்ணீரை ஊற்றி விட்டு, சூரிய வெளிச்சத்தைக் காட்டி விட்டு அரை மணி நேரத்தில் ”தேவையானதை எல்லாம் தந்து விட்டோமே, பின் ஏன் செடி வரவில்லை, என்ன ஆயிற்று?” என்று தோண்டிப்பார்ப்பதோ, இந்த முயற்சியே வியர்த்தம் என்று அடுத்த நாள் முதல் தண்ணீர் ஊற்ற மறுப்பதோ முட்டாள்தனம். அது போலத் தான் பிரபஞ்ச தொடர்பை வளர்த்தலும்.

ஒரு சிறு செடிக்கே நாம் அது வளர அவகாசம் கொடுக்க வேண்டும் என்றால் ஆழ்மன சக்தி என்ற மகாசக்தியை வளர்த்துக் கொள்ள போதுமான அவகாசம் தந்து தானாக வேண்டுமல்லவா? இந்த சக்தி நம் பயிற்சிகளுக்குப் பின்னால் எத்தனை காலத்தில் வெளிப்பட ஆரம்பிக்கும் என்பது அவரவர் தன்மையைப் பொறுத்தது. இதில் இது வரை எந்த அளவு வந்திருக்கிறோம் என்று எந்தக் கட்டத்திலும் அளக்கக் கூடிய அளவுகோல் இல்லை. ஆனால் நாம் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கும் வரை, ஆர்வம் குறையாமல் இருக்கும் வரை இதில் நுணுக்கமான முன்னேற்றங்கள் உள்ளுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் என்பது மட்டும் உறுதி.

அமைதியின்மை:

மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது சாதாரண மனிதர்களுக்கு சுலபமான செயல் அல்ல என்றாலும் அவ்வப்போது சிறிது நேரத்திற்காவது மனதை அமைதிப்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஏனென்றால் பிரபஞ்சத்தில் இருந்து வரும் செய்திகளைக் கேட்க முற்படுகிற நேரத்தில் உள்ளே மற்ற இரைச்சல்கள் அதிகம் இருக்குமானால் நம்மால் எதையும் அறிய முடியாது. நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு ஆகியவை இருக்குமானால் மனம் அமைதியடைய மறுக்கும். முதலில் என்னைக் கவனி, இதற்கு எதாவது செய் என்று அந்த உணர்ச்சிகள் கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்குமானால் எவ்வளவு முயன்றாலும் பிரபஞ்ச செய்திகளை அறிந்து கொள்ள முடியாது.

இந்த மூன்று தடைகளை முறியடித்து விட்டால் பிரபஞ்ச சக்திகளை அடையத் தேவையான சூழ்நிலையை உங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள் என்று பொருள்.

Share