அருள்மிகு அமிர்தாம்பிகை உடனாய அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்

அருள்மிகு அமிர்தாம்பிகை உடனாய அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்

அருள்மிகு அமிர்தாம்பிகை உடனாய அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில், திருவக்கரை, விழுப்புரம் மாவட்டம்

வேறு எந்த சிவத்தலங்களிலின் அமைப்பிலிருந்தும் மாறுபட்டு வக்கிரமாக அமைந்திருக்கும் ஒரு திருக்கோயிலைக் காண வேண்டுமா? வாருங்கள் திருவக்கரை திருத்தலத்திற்கு.

தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்கள் 32-ல் 30-ஆவது திருத்தலம் திருவக்கரை.

திருத்தலபுராணம்

அசுரர்கள் தவம் செய்வதும், அவர்களுக்கு சிவபெருமான் வரம் தருவரும், பெற்ற வரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மற்றவர்களைக் கொடுமைப்படுத்துவதும், பின்னிட்டு வரம் கொடுத்தவராலேயே அழிவுறுவதும் வழக்கமான ஒன்று தானே?. அப்படிப்பட்ட ஒரு புராணம் தான் இத்திருத்தலப் புரணமும்.

வக்கிராசுரன் என்ற அசுரன் ஒருவன் தனது தொடயின் மீது வைத்து சிவபெருமானைப் பூஜித்து சிவபெருமானிடம் இருந்து பல வரங்களைப் பெற்றான். அவ்வாறு பெற்ற வரங்களின் பலனாக வக்கிராசுரனும் மற்ற அசுரர்களைப் போலவே பலருக்கும் துன்பத்தைத் தந்தான். எனவே, அவனால் துன்பமுற்றவர்கள், அவனுக்கு வரம் கொடுத்த சிவபெருமானிடம் சென்று தங்களிடம் பெற்ற வரத்தின் பலனாக வக்கிராசுரன் எல்லோரையும் துன்புறுத்துவதாகவும் அவனிடமிருந்து தங்களைக் காத்தருளுமாறும் முறையிட்டனர். வக்கிராசுரனுக்கு வரமளித்த தானே அவனை வதம் செய்யலாகாது என்று எண்ணியோ என்னவோ சிவபெருமான், மகாவிஷ்ணுவை அழைத்து, வக்ராசுரனை வதம் செய்யுறுமாறு வேண்டினார். அதன்படி வக்ராசுரனுடன் போர் புரிந்து தனது சக்ராயுதத்தைப் பிரயோகித்து மகாவிஷ்ணு வக்ராசுரனை வதம் செய்தார்.

வக்ராசுரன் மட்டுமா கொடுமை செய்தான்? அவனது சகோதரி துன்முகியும் தனது சகோதரனைப் பின்தொடர்ந்தாள். எனவே அவளையும் வதம் செய்ய எண்ணிய சிவபெருமான், துன்முகியை வதம் செய்ய உமாதேவியை அனுப்பி வைத்தார். துன்முகி அந்த சமயத்தில் கருவுற்றிருந்தபடியால், உமாதேவியார், துன்முகியின் கருவிலிருந்த ஒரு பாவமுமரியாத குழந்தையை எடுத்து பத்திரமாகத் தன் காதில் மாட்டிக்கொண்டு, துன்முகியை வதம் செய்தார்.

வக்கிராசுரன் ஆட்சி செய்த இடமல்லவா? ஆதலால் உமாதேவியார் இவ்விடத்தில் வக்கிர காளியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

வக்கிராசுரனை வதம் செய்த மகாவிஷ்ணுவும் இங்கே தனிச் சந்நிதியில் ஆறடி உயரத்தில் வரதராஜப் பெருமாளாக நின்ற திருக்கோலத்தில் தனது வலக் கையில் பிரயோகச் சக்கரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் என்பது திருவக்கரை திருக்கோயிலின் தனிச் சிறப்பு.

இத்திருத்தலத்தில் சனீஸ்வரபகவான் வக்கிர சனியாகக் காட்சி கொடுக்கிறார். பிற திருக்கோயில்களில் அமைந்திருப்பது போன்று சனீஸ்வர பகவானின் வாகனமான காக்கையின் தலையானது சனீஸ்வர பகவானுக்கு வலது பக்கமாக இல்லாமல் இடது பக்கமாக வக்கிரமாக அமைந்திருப்பதிலிருந்து இதனை உணரலாம்.
வக்கிரம் இன்னும் இருக்கிறது இங்கே.

உள் பிரகாரத்தின் முடிவில் அருள்பாலிக்கும் நடராஜப் பெருமான், வழக்கத்திற்கு மாறாக வலப் பாதம் தூக்கித் திருநடனம் புரிகின்றார். அது மட்டுமா? வழக்கமாகப் பரந்து விரிந்து காணப்படும் அவரது சடாமுடியும் விரிந்து பறக்காமல் கூர்ம சடையாகக் கொண்டை முடிந்து கொண்டு திருநடனம் புரிகிறார். இதனைத் தான் வக்கிர தாண்டவம் என்கின்றனர்.

சாதாரணமாக, ஒரு சிவத் தலத்திற்குள் சென்றால், பலிபீடம், நந்தி, கொடிமரம், மூலவர் ஆகியோரை ஒரே நோர்க்கோட்டிலேயே நாம் கண்டிருப்போம். ஆனால் இங்கு இவை மூன்றும் நேர்க்கோட்டில் அமையால் ஒன்றுக்கொன்று சற்று விலகி வக்கிரமாக அமைந்திருப்பதைக் காணலாம்.

திருத்தல சிறப்பு

இத்திருத்தலத்தில் வாழ்ந்த குண்டலினி முனிவர் என்னும் சித்தர் இங்கே ஜீவசமாதி அடைந்தார் என்று இத்திருக்கோயில் வரலாறு கூறுகிறது. குண்டலினி முனிவர் ஜீவ சமாதி அடைந்த இடத்தில் ஒரு லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. அந்த லிங்கம் தியானலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. அதற்கு எதிரிலேயே தியானக் கூடமும் அமைந்துள்ளது.

பூஜைக்கு உரிய லிங்க வகைகளாக, ஆறு வகைகளைத் திருமூலர் தம்முடைய திருமந்திரத்தின் ஏழாவது தந்திரத்தில் குறிப்பிடுவார். அவை ஆண்ட லிங்கம், பிண்ட லிங்கம், சதாசிவ லிங்கம், ஞான லிங்கம், ஆத்ம லிங்கம், சிவலிங்கம். ஆத்ம லிங்கத்தைத்தான் வக்கிராசுரன் தன்தொடை மீது வைத்து வணங்கி சிவபெருமானிடம் வரம் பெற்றான். கிழக்கு நோக்கிய தத்புருட முகம், வடக்கு நோக்கிய வாமதேவ முகம், தெற்கு நோக்கிய அகோர முகம் ஆகிய மும்முகங்களுடன் இங்கு இறைவன் அருள்பாலிக்கிறார். அதிகாலையில் தத்புருட முகத்திற்கு மஞ்சள் பூசியும், உச்சி காலத்தில் வாமதேவ முகத்திற்கு சந்தனம் பூசியும், மாலையில் அகோர முகத்திற்கு குங்குமம் பூசியும் பூஜை செய்யப்படுகிறது. இவ்வாறான பூசையைத் தரிசிப்பதென்பது அர்த்தநாரீஸ்வரர் பெருமானின் முழு அருளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
அருள்மிகு அமிர்தாம்பிகை இத்திருத்தலத்தில் தனிச் சன்னதி கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

சாதாரணமாக கிழக்கு நோக்கியே அருள்பாலிக்கும் அன்னை, திருவக்கரையில் அமிர்தாம்பிகையாகவும், திருவெற்றியூரில் வடிவுடையம்மையாகவும், மேலூரில் கொடியிடை அம்மையாகவும், திருமுல்லைவாயிலில் திருக்குடை அம்மையாகவும் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பது சிறப்பு.

அருள்மிகு வக்கிரகாளியம்மன்

இங்கு அருள்பாலிக்கும் வக்கிரகாளி எட்டு திருக்கரங்களின் காட்சி தருகிறார். காளி அம்மனின் திருவுருவம், சுடர் விட்டு பரவும் தீச்சுடர்களைப் பின்னனியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம், வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், இடது காதில் ஓலைச் சுருள், எட்டு திருக்கரங்களில், வலப்புறக்கைகளில் பாசம், சக்கரம், வாள், கட்டாரி, இடப்புறக் கரங்களில் உடுக்கை, கேடயம், கபாலம், மற்றொரு கை ஆள்காட்டி விரல் நீட்டி அம்மனின் பாதத்தை காட்டுகிறது. தவறு செய்பவர்களை காளி தண்டிப்பாள் என்ற அச்சத்தையும், தவறு செய்யக் கூடாது என்ற தெளிபையும் உணர்த்துகிறார் இத்தலத்து வக்கிரகாளி.

அருள்மிகு காளியம்மனின் கருவறைக்கு வடப்புறம் யோகேஸ்வர லிங்கமும், இடப்புறம் வலம்புரி கணபதியும் வீற்றிருக்கின்றனர். 108 சிவத்தலங்களுக்கு ஒன்று என்ற முறையில் தான் வலம்புரி கணபதியைப் பிரதிஷ்டை செய்வது மரபு. அதன்படி இத்திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள வலம்புரி வினாயரை வழிபட்டால், 108 சிவத்தலங்களில் உள்ள வினாயர்களையும் வழிபட்ட பலன் உண்டு என்பர்.

திருவக்கரை திருத்தல வழிபாட்டுப் பலன்கள்:

வக்கிர தோஷம் உள்ளவர்கள் இத்திருத்தலத்திற்கு வந்து வக்கிர காளி, வக்கிர லிங்கம், வக்கிர சனி பகவான் ஆகியோரை தரிசித்து, வக்கிரமாக கட்டப்பட்டுள்ள இத்திருக்கோயிலை வலம் வந்தால், வக்கிர தோஷத்தால் ஏற்பட்டுள்ள தொல்லைகளும் துன்பங்களும் நீங்கி வாழ்க்கையில் மகிழ்ச்சி கிட்டும்.

திருமணத் தடை, பிள்ளைப் பேறு அற்றோர் இத்திருக்கோயிலுக்கு வந்து துர்க்கையம்மனை செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் இராகு காலத்தில் அர்ச்சனை செய்தால் திருமணம் கைகூடும் என்பதும், பிள்ளைப்பேறு கிட்டும் என்பதும் ஐதீகம்.

திருமணம் தடை படும் கன்னிப் பெண்கள், இத்திருக்கோயிலின் கருவறையின் உள் சுவற்றில் உள்ள கருங்கல் சுவற்றில் மஞ்சள் பூசி பூசை செய்து, பஞ்ச கன்னி தோஷம் என்ற தோஷ நிவர்த்தி செய்து கொண்டால், திருமணம் விரைவில் கைகூடும் என்பதும் மற்றொரு ஐதீகம்.

நினைத்த காரியம் கைகூடவும், உடல்நலமற்றோரும், மன நிம்மதியற்றோரும் மூன்று பௌர்ணமி தினத்தில் தொடர்ந்து இடைவிடாது தரிசித்து வந்தால் நினைத்த காரியம் கைகூடுவதுடன், உடல்நலமும் மனநலமும் கிட்டும் என்பவர்.

காலனையும் காளி காலால் மிதிப்பாள்
சனியனை சாமுண்டி சாடியே மிதிப்பாள்
கோள்களில் கொடுமையை வாள் கொண்டு அறுப்பாள்
சூலத்தால் தீமையை வேறுடன் தூர்ப்பாள்
கன்னியர்க்கு காளியே மணமே முடிப்பாள்
கண்ணென போற்றும் பிள்ளைகளும் தருவாள்
நம்பிவரும் பக்தருக்கு நாயகியே அருள்வாள்
தீவினை தேயுமே நல்வினை பெருகுமே
செய்கின்ற செயல்களில் தேவியும் இருப்பாள்
செம்மெயும் திறத்தையும் பாவிக்கும் அருள்வாள்
வருந்தியே அழைப்போர் முன் காளியாக வருவாள்
வேண்டி கேட்கும் வரமே தருவாள் காளி.

என்பது இத்திருத்தலத்து வக்கிர காளியின் பெருமை.

திருக்கோயில் அமைப்பு

வராக நதி என்றழைக்கப்படும் சங்கராபரணி ஆற்றின் வடகரையில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். சாதாரணமாக ஊரின் எல்லையில் தான் காளியம்மன் திருக்கோயில்கள் அமைந்திருக்கும். ஆனால் இங்கே ஊரின் நடுவில் திருக்கோயில் அமைந்துள்ளது தனி வக்கிரச் சிறப்பு.
திருக்கோயிலின் பிரதான வாயிலில் ராஜகோபுரம் அமைந்துள்ளது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் உட்பிகாரத்தில், இடது பக்கமாக அருள்மிகு வக்கிரகாளியம்மன் சன்னதி அமைந்துள்ளது. இதனையடுத்து தீபலட்சுமி சன்னதி அமைந்துள்ளது. இங்கு இராகுகாலத்தில் தீபமேற்றி வழிபட்டுவிட்டு மாங்கல்யம் கட்டுவித்து வந்தால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
அருள்மிகு வக்ரகாளியம்மன் சன்னதிக்கு எதிரில் மேற்கு நோக்கிய நிலையில் அமைந்திருக்கிறது

ஆத்மலிங்கர் சன்னதி. இது கண்டலிங்கம் என்றும் அழைக்கப்பெறும். இந்த லிங்கத்தை வக்கிராசுரன் பூசித்ததால், வக்கிரலிங்கம் என்ற பெயர் ஏற்பட்டது.

அருள்மிகு வக்கிரகாளியம்மன் சன்னதிக்கு இடது புறமும், தன் முன்அமைந்துள்ள கிளிக் கோபுரத்திற்கு முன்பாகவும் அமர்ந்துள்ள நந்தியம்பெருமான், துவஜஸ்தம்பத்திற்கும் கருவறைக்கும் நேராக இல்லாமல் வடப்புறமாக சற்று விலகி அமர்ந்திருப்பது வக்கிரமாகக் கருதப்படுகிறது.

திருவக்கரையின் வரலாற்று சிறப்பு:

இத்திருக்கோயிலின் வரலாற்றோடு இணைந்த மற்றொரு சிறப்பும் திருவக்கரை திருத்தலத்திற்கு உண்டு. பல கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு இருந்த மரங்கள் பூமியில் புதையுண்டு போனதாகவும். அவை அதே தோற்றத்தில் கல் மரங்களாக காட்சியளிப்பதாகவும் நிலவியல் ஆய்வாளர்கள் கருத்துரைக்கின்றனர். இந்திய நிலவியல் துறையினரும் திருவக்கரையில் தேசீய புதை படிவப் பூங்கா அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இப்போதும் கூட அத்தகைய கல்மரங்களை திருவக்கரையில் நாம் காணலாம்.மகாவிஷ்ணுவால் சம்ஹாரம் செய்யப்பட்ட வக்கிராசுரனின் எலும்புக் கூடுகளே கல்மரங்களாகக் திருவக்கரையில் காணப்படுகின்றன என்றும் இங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.

கல்வெட்டுக்கள்

முதலாம் இராஜராஜன் காலமான கி.பி.1430-ல் இருந்து, செம்மந்தை காங்கேயன் வரையுள்ள பல்வேறு மாமன்னர்களும், அவர்தம் தேவிமார்களும் குறுநில மன்னர்களும் அரசுஅதிகாரிகளும் செய்யவித்த திருப்பணிகள், திருக்கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிவந்தங்கள் குறித்தும் 43 கல்வெட்டுக்கள் இத்திருக்கோயிலின் வரலாற்றைச் சொல்வதாக அமைந்துள்ளதாக இத்திருக்கோயிலின் தலவரலாறு தெரிவிக்கிறது.

திருத்தல விருட்சம்

வில்வம்.

திருத்தலத் தீர்த்தம்

சந்திர தீர்த்தம், பிரம்ம தீர்த்தம்.

தேவாரம் பாடியோர்

திருஞானசம்பந்தர் தனது மூன்றாம் திருமுறை தேவாரத்தில் அறுபதாவது திருத்தலமாக திருவக்கரை பற்றி பதினோரு பதிகங்களைப் பாடியுள்ளார். அவற்றில் ஒன்று இதோ,

பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி செப்புதுமே. (3.60.2)

திருநாவுக்கரசர் பெருமானும் தனது ஆறாம் திருமுறை தேவாரத்தில் ஐம்பத்தி ஓராவது திருத்தலமான திருவீழிமலை திருத்தலத்து இறைவனைப் பற்றிப் பாடும்போது திருவக்கரை திருத்தலத்து இறைவனைப் பற்றிப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தப் பாடல்,

கயிலாய மலையுள்ளார் காரோ ணத்தார்
கந்தமா தனத்துளார் காளத்தி யார்
மயிலாடு துறையுளார் மாகா ளத்தார்
வக்கரையார் சக்கரம்மாற் கீந்தார் வாய்ந்த
அயில்வாய சூலமுங் காபா லமும்
அமருந் திருக்கரத்தார் ஆனே றேறி
வெயிலாய சோதி விளங்கு நீற்றார்
வீழி மிழலையே மேவி னாரே. (6.51.1)

வடலூர் வள்ளல் பெருமானும் இத்திருத்தலத்து இறைவனைப் பற்றி தனது திருவருட்பாவின் மூன்றாம் திருமுறையில்,

என்னுந் திருத்தொண்ட ரேத்து மிடைச்சுரத்தின்
மன்னுஞ் சிவானந்த வண்ணமே – நன்னெறியோர் (266)

துன்னுநெறிக் கோர்துணையாந் தூயகழுக் குன்றினிடை
முன்னுமறி வானந்த மூர்த்தமே – துன்னுபொழில் (267)

அம்மதுரத் தேன்பொழியும் அச்சிறுபாக் கத்துலகர்
தம்மதநீக் குஞ்ஞான சம்மதமே – எம்மதமும் (268)

சார்ந்தால் வினைநீக்கித் தாங்குதிரு வக்கரையுள்
நேர்ந்தார் உபநிடத நிச்சயமே – தேர்ந்தவர்கள் (269)

தத்த மதுமதியாற் சாரும் அரசிலியூர்
உத்தமமெய்ஞ் ஞான ஒழுக்கமே – பத்தியுள்ளோர் (270)

என்று பாடியுள்ளார்.

அருணகிரிநாதரும் தனது திருப்புகழில்,

கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ
தொழிவ துனைச்சிறி …… துரையாதே

கருவழிதத்திய மடுவ தனிற்புகு
கடுநர குக்கிடை …… யிடைவீழா

உலகு தனிற்பல பிறவி தரித்தற
வுழல்வது விட்டினி …… யடிநாயேன்

உனதடி மைத்திரள் அதனினு முட்பட
வுபய மலர்ப்பத …… மருள்வாயே

குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட
நிசிசர னைப்பொரு …… மயில்வீரா

குணதர வித்தக குமர புனத்திடை
குறமக ளைப்புணர் …… மணிமார்பா

அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு
மணிதிரு வக்கரை …… யுறைவோனே

அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன
அவைதரு வித்தருள் …… பெருமாளே. (722)

என்று பாடி பேறுபெற்றுள்ளார்.

பெரியபுராணம் எழுதிய சேக்கிழாரும் இத்திருத்தலம் குறித்து தான் இயற்றிய பெரிய புராணத்தில்,

கன்னி மாவனம் காப்பு என இருந்தவர் கழல் இணை பணிந்து அங்கு
முன்ன மா முடக்கு கான் முயற்கு அருள் செய்த வண்ணமும் மொழிந்து ஏத்தி
மன்னுவார் பொழில் திரு வடுகூரினை வந்து எய்தி வணங்கிப்போய்
பின்னுவார் சடையார் திருவக்கரை பிள்ளையார் அணைவுற்றார் (2861-6.1.963)

என்று திருவக்கரை திருத்தலத்தைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருக்கோயில் சொத்துக்கள்

இத்திருக்கோயிலுக்கு 8.49 ஏக்கல் நஞ்சை நிலமும், 20.31 ஏக்கர் புஞ்சை நிலமும், 0.18 ஏக்கர் நத்தம் நிலமும், மூன்று குடியிருப்புகளும் உள்ளதாக திருக்கோயிலின் தல வரலாறு புத்தகத்தில் காணப்படுகிறது.

முக்கிய நிகழ்வுகள்

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று அருள்மிகு வக்கிரகாளி அம்மனுக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்று இரவு 12.00 மணிக்கு ஜோதி பூஜையும் நடைபெறுகிறது.

அதே நாளில் அருள்மிகு வரதராஜப் பெருமாளுக்கு சந்தனக் காப்பு அலங்காரம் நடைபெறுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று அருள்மிகு வக்கிரகாளியம்மனுக்கும் அருள்மிகு வரதராஜ பெருமாளுக்கும் சந்தனக் காப்பு அலங்காரமும் பகல் 12.00 மணிக்கு தீப தரிசனமும் நடைபெறுகிறது.

மேலும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப உற்சவமும், தை கிருத்திகை உற்சவமும், தமிழ்ப்புத்தாண்டு (சித்திரை) அன்று தெப்போற்சவமும் நடைபெறுகின்றன.

தங்குமிடம்

புதுச்சேரியிலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், திண்டிவனத்திலிருந்து 28 கி.மீ. தொலைவிலும், முருகப் பெருமான் திருத்தலமான மயிலத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலும் திருவக்கரை திருத்தலம் அமைந்துள்ளது. புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம் நகரங்களில் தங்குமிட வசதிகள் உள்ளன.

திருக்கோயில் தரிசன நேரம்

காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
மாலை 05.00 மணி முதல் இரவு 08,00 மணி வரை.

திருக்கோயில் நிர்வாகம்

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையினரால் இத்திருக்கோயில் நிர்வாகம் செய்யப்படுகிறது.

திருக்கோயில் முகவரி

செயல் அலுவலர்,
அருள்மிகு சந்திரமௌலீஸ்வரர் திருக்கோயில்,
திருவக்கரை, வானூர் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.

Share