சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) பகவதியம்மன் அம்மன் ஆலயம்.

சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) பகவதியம்மன் அம்மன் ஆலயம்.

‘கடவுளின் தேசம்’ என எல்லோராலும் அழைக்கப்படும் கேரள மாநிலம், எர்ணாகுளத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, சோற்றானிக்கரை (சோட்டானிக்கரை) பகவதியம்மன் அம்மன் ஆலயம். குருவாயூர், சபரிமலை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் போலவே சோற்றானிக்கரை பகவதி அம்மனும் புகழ்பெற்ற ஆலயமாகும். கேரளா, தமிழகம், கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆயிரக்கணக்கில் எப்போதும் வந்த வண்ணம் உள்ளனர்.

தலவரலாறு:
முற்காலத்தில் மலையாளதேசம் வனங்கள் அடர்ந்த கானகப் பகுதியாக இருந்தது. அங்கே, கண்ணப்பன் என்னும் வேடுவன் வாழ்ந்துவந்தான். மனைவி இல்லாததால், தனது மகள் பவளத்துடன் வசித்துவந்தான். கண்ணப்பனோ வனதேவதையை அனுதினமும் வணங்கும் தீவிர பக்தன்.

அருகாமையிலிருக்கும் கிராமங்களுக்குச் சென்று அங்கு மந்தையிலிருக்கும் மாட்டையோ அல்லது வனத்துக்குள் மேய்ச்சலுக்கு வரும் மாடுகளில் ஏதேனும் ஒரு மாட்டையோ திருடி வந்து பலிகொடுத்துவிட்டு, தன் கூட்டத்தாரோடு தானும் சாப்பிடுவது வழக்கம். கண்ணப்பனின் வீட்டிலும் மாடு ஒன்று, கன்றை ஈன்று பால்கொடுத்துவந்தது. கன்றுகுட்டியின் மீது மகள் பவளத்துக்கு அலாதிப்பிரியம் எப்போதும் அதை பிடித்துக்கொண்டு விளையாடுவாள்.

ஒரு நாள் வனதேவதைக்குப் பலியிட எந்த மாடும் கிடைக்கவில்லை. அதனால், தன் வீட்டிலிருந்த மாட்டையே பலிகொடுப்பது என முடிவு செய்து அதை அவிழ்க்கச்சென்றான். அப்போது, கன்று, தாயின் பிரிவு தாளாமல் ‘அம்மே’ என அலறியது. இதைப் பார்த்ததும் மகள் பவளம் ஓடோடி வந்து கன்றுக்குட்டியைக் கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள். `அப்பா! என்னைப்போலவே இந்தக் கன்றும் தாயற்ற பசுவாக வேண்டுமா?’ எனக் கேவிக் கேவி அழுதாள்.

மகளின் அழுகை, கண்ணப்பனின் மனதை என்னவோ செய்தது. ‘இனி ஒரு நாளும் உயிர்களைப் பலி கொடுக்க மாட்டேன்’ என அழுது புலம்பி அரற்றினான். அன்றிலிருந்து புலால் உணவை உண்ணாமல் வாழத் தொடங்கினான். சில நாள்கள் சென்றதும், அவனுடைய மகளும் இறந்து போனாள். யாருமற்ற நடைப்பிணமாக தன் நாள்களை நகர்த்திவந்தான்.

ஒருநாள் கனவில் ஒருகாட்சி தோன்றியது. லோக மாதா ஜகதாம்பாள் கோடி சூரிய பிரகாசத்துடன், ‘கண்ணப்பா, நீ கொடுத்து வைத்தவன். உன் மகளின் நேசத்துக்குரிய பசு சாட்சாத் மகாலட்சுமிதான் என்பதை அறிந்துகொள்’ எனக்கூறி மறைந்தாள். படுக்கையிலிருந்து எழுந்து தொழுவத்தைப் பார்த்தான். அங்கே பசுவும் கன்றும் சிலைகளாக மாறியிருந்தன. தன் கூட்டத்தாரிடம் விஷயத்தைச் சொன்னான்.

அவர்களுக்கு அந்த இடத்தில் ‘காவு’ அமைத்து மரங்களால் ஆன கோயிலை உருவாக்கி வழிபடத்தொடங்கினர். ஆனால், கால ஓட்டத்தில் அந்தப் பகுதி முழுவதுமே இயற்கையின் ஆளுமைக்குச் சென்று மரங்களடர்ந்த பகுதியானது.

பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னர் கிராமத்துப் பெண்னொருத்தி புல் அறுத்துக்கொண்டிருந்தபோது திடீரென ரத்தம் பீறிட்டது. அவள் அலறியடித்துக்கொண்டு நடந்த விஷயத்தை ஊர் மக்களிடம் சொன்னாள். அவர்கள் அதை எடாட்டு நம்புதிரியிடன் சென்று கூற, அவர் வந்து பார்த்துவிட்டு, ‘இந்த இடம் முழுவதுமே தேவியின் அருள் பெற்ற இடம். இங்கு ஆலயம் அமைத்து வழிபடுவோம்’ என்றார்.

`இந்தப் பசு சிலை, தேவியின் அம்சம். இதற்கு உடனே அபிஷேகமும் நைவேத்தியமும் செய்ய வேண்டும். இங்கே குடிகொண்டிருப்பது சந்தேகமில்லாமல் லட்சுமிதேவியேதான். இது லட்சுமி நாராயணமூர்த்தியின் வாசஸ்தலமாகத் திகழவிருக்கிறது!’ என்று சொல்லி பூஜை புனஸ்காரங்களை அப்போதே தொடங்கினார் எடாட்டு நம்பூதிரி. இங்கே லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை என்னும் மூன்று உணர்வு நிலைகளோடு தேவி திகழ்கிறாள்.

தேவியின் வலது பக்கத்தில் இரண்டு அடி உயரமுள்ள கிருஷ்ணன் சிலை உள்ளது. ‘அம்மே நாராயணா’, ‘தேவி நாராயணா’ என்று மனமுருகி பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

கோயிலின் உள்ளே தென்மேற்கு மூலையில் இருப்பவர், சிவபெருமான். அருகிலேயே கணபதி சந்நிதி. அங்கிருந்து தெற்குப் பக்கமாக இருப்பது நாகராஜா சந்நிதி. கோயில் குளத்தின் கிழக்குக்கரையில் அமைந்திருப்பது உக்கிரகாளியான கீழ்க்காவு பகவதி சந்நிதி.

அதிகாலையில் தேவியை சரஸ்வதியாகப் பாவித்து, வெள்ளை ஆடை அணிவித்து பூஜிக்கிறார்கள். மதிய வேளையில் தேவிக்கு சிவப்பு ஆடை அணிவிக்கப்பட்டு காளியாகவும், மாலையில் ராஜராஜேஸ்வரியாகவும் வழிபடுகிறார்கள்.

அம்மே நாரயணீ தேவி நமோ நமஹ

Share