திருமந்திரம் – 504

திருமந்திரம் – 504

*திருமந்திரம் – 504*

அண்டமோ டெண்டிசை தாங்கும் அதோமுகங்
கண்டங் கறுத்த கருத்தறி வாரில்லை
உண்டது நஞ்சென் றுரைப்பர் உணர்விலோர்
வெண்டலை மாலை விரிசடை யோற்கே.1

*பொருள்:* அண்டங்களையும், எட்டுத்திசைகளையும் முட்டின்றிக் காத்தருளும் சிவபெருமானின் நிலவறையாகிய கீழ்நோக்கிய திருமுகம் அதோமுகம். அம் முகத்தின் கண்டங்கறுத்தது குற்றம் பொறுத்ததேயாம். மற்றுக் கூறப்படும் புராணக்கதைகள் உருவகமேயாம். கண்டங் கறுத்த கருத்து: திருப்பாற்கடல் – ஆருயிர் நன்றாய்வாழச் சிவபெருமான் திருவருளால் நல்கிய உலகு உடல் உடைமைகளாம். கடைதல் – சிவனை மறந்து யான் என்னும் செருக்கொடு வானவர் தானவர் எனப்படும் இருவினைக்கண் முயலுதல். நஞ்சு – சிவபெருமானை மறந்ததாகிய குற்றம். அதுவே கறையாகும். அக் குற்றத்தை ஏற்றுப் பொறுத்ததே கண்டம் கறுத்ததாகும். இதுவே உண்மைக்கருத்து.
*சொல்விளக்கம:*
நஞ்சு – வெறுப்பு. கண்டம் – வரம்பு; திருவருளாணை.
அதோமுகம் – பிரகிருதிமாயை.

Share