திருமந்திரம் 54

திருமந்திரம் 54

சிவன்முதல் மூவரோ டைவர் சிறந்த
அவைமுதல் ஆறிரண் டொன்றொடொன் றாகும்
அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்
சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே.

(ப. இ.) அத்தன், அன்னை, ஓசை, ஒளி (சிவன், சத்தி, நாதம், விந்து) ஆகிய அருவம் நான்கும் சிவன் முதல் மூவர். அருளோன் (சதாசிவன்) அருவுருவம் ஒன்று. ஆண்டான், அரன், அரி, அயன் என்னும் நால்வரும் உருவத்தர். இவையெல்லாம் எண்ணுங்கால் ஒன்பது என்னும் எண்ணிலடங்கும். அதுவே ஆறு, இரண்டு, ஒன்று. இவை ஒன்பதும் நிலையால் வேறுபட்டதல்லாமல் பொருளால் ஒன்றே. அவற்றுள் விந்துவும் நாதமும் சிறப்புள்ளனவாகும். இக் குழுவினுக்கு முதன்மை சங்கரன்; அப்பெயரே சிறந்த பெயர்.

(அ. சி.) சிவன்…ஐவர் – சிவம் – சத்தி – விந்து – நாதம் – சதாசிவம் – மகேசன் – உருத்திரன் – மால் – அயன். சிவன் முதல் மூவர் – 4 + ஐவர் 5 ஆக 9. அவை … ஆகும் – அவை ஒன்பதும் தோற்றத்தில் ஒன்றாகும். ஆறு + இரண்டு + ஒன்று – 9.

Share