திருமூலர்

திருமூலர்

திருமூலர்
**********

மிகவும் உத்தமமாக வாழ்ந்த சித்தரின் வரலாறு இது.சித்தர்களில் முதன்மையானவரும் சிவபெருமானிடமும்,நந்தீசரிடமும் உபதேசம் பெற்றவருமான திருமூலர் கயிலாசப் பரம்பரையை சேர்ந்தவர்.

இவரது வரலாறு குறித்து பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறியிருக்கும் தகவல்கள்.

திருக்கயிலாலயத்தில் நந்தி தேவரது திருவருள் பெற்ற மாணவர்களுள் ஒருவராய் அட்டமா சித்திகளைக் கைவரப் பெற்ற இச் சித்த மாமுனிவர் திருக்கயிலாயத்தில் இருந்து புறப்பட்டு தென்திசை நோக்கி செல்லும் வழியில் திருக்கேதாரம்,பசுபதி,நேபாளம்,அவிமுத்தம்(காசி),விந்த மலை,திருப்பரப்பதம்,திருக்காளத்தி,திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்குச் சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவாலங்காடு ஆகிய திருத்தலங்களுக்கு சென்று பின்னர் காஞ்சி நகர் அடைந்து பின்னர் திருவதிகை,தில்லை என்று காவிரியில் நீராடி அதன் பிறகு திருவாவடுதுறையை அடைந்து இறைவனை தரிசித்து விட்டு செல்கையில் அந்தனர்கள் வாழும் சாத்தனூரில் தொன்று தொட்டு மாடுகளை மேய்க்கும் குடியில் பிறந்த ஆயனாகிய மூலன் என்பவன் இறந்து நிலத்தில் விழுந்து கிடக்க பசுக்கள் அனைத்தும் அவனை சுற்றி வந்து கதறி அழுதன.

இக்காட்சியை கண்ட சித்த பெருமான் அப்பசுக்களின் துயர் நீக்க எண்ணித் தம்முடைய உடலை மறைவான இடத்தில் கிடத்தி விட்டு கூடு விட்டு கூடு பாய்தல் (பிரகாயப் பிரவேசம்)என்னும் பவன வழியில் தமது உயிரை அந்த இடையது உடலில் செலுத்தி திருமூலராய் எழுந்தார்.

மூலன் எழுந்ததும் பசுக்களெல்லாம் துயர் நீக்கி அன்பினால் அவனது உடம்பை நக்கி,மோந்து மிகுந்த களைப்பினால் துள்ளி கொண்டு புல் மேயச் சென்றன.

அது கண்டு மகிழ்ந்த திருமூலர் (மூலன்) பசுக்கள் செல்லும் வழியே சென்று பின்னர் அவைகள் தங்கள் இல்லங்களுக்கு சென்றதும் தான் மட்டும் தனித்து நின்றார்.

அப்போது மூலனுடைய மனைவி பொழுது சாய்ந்த பின்னரும் தன் கணவர் இன்னும் சேராதது கண்டு அவனை தேடிக் கொண்டு வந்தவள் மூலன் வடிவில் சித்தரை வீட்டுக்கு அழைத்தாள்.

மூலரோ தான் அவளுடைய கணவன் அல்ல,அவனின் விதி முடிந்து இறந்துவிட்டான் என்றார்.தன் கண்ணெதிரே இருக்கும் கணவனே தான் இறந்து விட்டதாக கூறியதை கேட்டு மனம் பொறுக்காதவளாய் அவ்வூரில் உள்ளவர்களை அழைத்து தன் கணவருக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினை கூறி கதறினாள்.
அங்கிருந்தோர் மூலனுக்கு அறிவுரை கூறி அவளுடன் வீடு திரும்பு மாறு கூற மூலன் வடிவிலுள்ள சித்தர் தன் நிலையை பல முறை எடுத்துக் கூறியும்
நம்பாததால் மறுபடியும் அவ்வுடலை செயலற்றதாக்கி உண்மையை விளக்கினார்.கண்ணெதிர நடந்த இந்த அதிசயத்தை கண்டு ஊர் பெரியவர்கள் மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
தன்னுடைய பழைய உடலை தேடி சென்ற சித்தர் அங்கு தன் உடலை காணததால் மூலனுடைய உடலிலே நிரந்தரமாக தங்கி திருவாடுதுறை கோயிலை அடைந்து யோகத்தில் வீற்றிருந்தது,உலக மக்களின் நன்மையை பொருத்து ஞானம்,யோகம்,சரியை,கியை என்னும் நால்வகை நன்னெறிகளும் கூறும் திருமந்திரம் என்னும் நூலை தொடங்கி ஓராண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களை பாடினார்.பின்னர் இந்நூல் நிறைவடைந்ததும் அதாவது 3000 ஆண்டுகளுக்கு பின் இறைவன் திருவடியை அடைந்தார்.சதுரகிரி தலப்புராணம் கூறும் திருமூலர் வரலாறு இது.

பாண்டியநாடு சித்து வித்தைகளுக்கு பெயர் போனது.அதனை ஆண்ட தவேத மன்னனின் பட்டத்தரியான சுந்தரவல்லிக்கு வீரசேனன் என்ற புதல்வனும்,இரண்டாவது மனைவியான சுந்தரவதனிக்கு தர்மாத்தன்,சூரசேனன்,வஜ்ராங்கதன் என்ற புதல்வர்களும் இருந்தனர்.
குருகுல வாசம் முடித்த பின் உரிய வயதில் நான்கு இளவரசர்களுக்கும் திருமணம் முடிந்தது.

வீரணன்-குணவதி,தர்மாத்தன்-தனமதி,சூரசேனன்-சுகமதி,வஜ்ராங்கன்-மந்திரவல்லி என்ற தம்பதிகள் நால்வரும் இல்லறத்தை நல்லறமாக்கி வாழ்ந்து வந்தனர்.

முதுமையடைந்த தவேதன் பட்டத்தரசியின் மகனான வீரசேனனுக்கு பட்டம் சூட்டி அரசனாக்கினான்.அரசனும் நல்ல விதமாக ஆட்சி புரிந்து குடிகளை நன்முறையில் காத்து வந்தான்.
இரவு நேரத்தில் வழக்கம் போல மாறு வேடம் பூண்டு நகர சோதனைக்கு கிளம்பிய மன்னன் வீரசேனன் திரும்பிய போது திடுக்கிட்டாள்.பார்வை மங்கிய நிலையில் உடல் முழுவதும் வியர்வை வெள்ளத்தில் நனைய துவண்டு போய் மஞ்சத்தில் படுத்து விட்ட மன்னனிடம் பதறிய நிலையில் காரணம் கேட்ட மனைவிக்கு பதில் சொல்ல முடியவில்லை.வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது.

அரண்மனை வைத்தியருக்கு செய்தி அனுப்பப்பட்டது.அவர் வருவதற்குள் மன்னனின் தலை துவண்டு சாய்ந்து விட்டது.அரண்மனை வைத்தியப் பட்டாளமே ஓடி வந்து மன்னரை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதை உறுதி செய்தது.

மன்னனின் மனைவி குரல் வெடிக்கக் கதறினாள்.அவளின் அழுகையொலி அந்த அரண்மனையை தாண்டி ஒலித்தது.அந்த நடுநிசியில் பாண்டிய நாடு சோகத்தில் புலம்பி தவித்தது.
அப்போது ஆகாய வீதியில் போய்க் கொண்டிருந்த திருமூலர் காதுகளில் இந்த புலம்பல் ஒலி அறைந்தார் போல் கேட்டது.அவர் கீழே நோக்கினார்.
அங்கே உயிரற்ற மன்னனின் உடலைக் கண்டு சோகம் தாளாமல் குணவதியும்,அரண்மனை சுற்றமும்,ஊர் மக்களும் ஓலமிட்டு அழுது கொண்டு இருந்தினர்.

நொடிப் பொழுதில் திருமூலருக்கு எல்லாம் புரிந்து விட்டது.அங்கு அழுதவரின் துயர் துடைக்க தீர்மானித்தார்.உடனே சதுரகிரிக்கு சென்று தான் தவம் புரியும் இடத்திற்கு சென்றார்.

தன் அந்தரங்க சீடன் குருராஜனை அழைத்து தான் சிறிது காலம் உன்னை பிரிந்திருக்க வேண்டியுள்ளது என்பதை தெரிவித்தார்.

“மகனே சிறிது காலம் பூவுலகில் மனிதனாக அதுவும் மன்னனாக வாழ விரும்புகிறேன்.பாண்டிய நாட்டின் ராஜேந்திரபுரியின் மன்னன் வீர சேனன் இறந்துவிட்டான்.அவரது அருமை மனைவியும் குடிமக்களும் அழுத காட்சி நெஞ்சை நெகிழச் செய்து விட்டது.அதனால் அந்த வீரசேனன் மகாராஜாவின் உடலில் பிரவேசித்து சில காலம் உலக வாழ்க்கையை ஈடுபடபோகிறேன்.நான் திரும்பி வரும் வரையிலும் கல்ப சாதனையால் வைரம் பாய்ந்து விளங்கும் இந்த உடலை காப்பாற்றி வைத்திருப்பாயாக”என்று கூறினார்.

முன்பு பசுக்களின் வருத்தத்தை தீர்ப்பதற்காக சுந்தரனார் உடலில் இருந்து இடையனாம் மூலனின் உடலில் புகுந்து தேவ உடலை இழந்து பூத உடலில் தங்கி விட்டார்.மறுபடியும் தெய்வீக உடலாக மாற்றிய மூலனின் உடலுக்கு சோதனை….ம்…
வீரசேனனின் உடலுக்காக இந்த மூலனின் உடலேயும் இழக்க துணிந்து விட்டீரோ?…என்று சீடனுக்கு மனதிற்குள் சந்தேகம் தோன்றினாலும் வெளியே கேட்கவில்லை.குருவின் கட்டளைக்கு மறு வார்த்தை பேசி அறியாத அந்த சீடனும் அவரின் செயலுக்கு சம்மதம் தெரிவித்தான்.

திருமூலர் குகையில் மறைவான ஓரிடத்தில் உடலை கிடத்தி விட்ட சூட்சும உடலோடு மன்னன் உடல் இருக்கும் இடத்திற்கு விரைந்தார்.அதற்குள் மன்னனின் உடலை கழுவி முடித்திருந்தார்கள்.கண்களில் கண்ணீர் வழிய குனவதி கதறிக் கொண்டிருந்தாள்.

அப்போது திருமூலர் மன்னின் உடம்பினுள் புகுந்தார்.அதுவரை அசையாமலிருந்த மன்னனின் உடல் அசைந்தது.சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டனர்.அழுகை ஒலி உடனே நின்றது.அதற்குள் திருமூலர் வீரசேன திருமூலராக எழுந்துவிட்டார்.
இறந்த மன்னன் உயிருடன் எழுந்ததை எண்ணி அனைவருக்கும் மகிழ்ச்சி.துயர கடலில் மூழ்கி கிடந்தவர்கள் இப்போது மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்தனர்.

தன் கணவர் இறக்கவில்லை என்று தெரிந்ததும் அரசனின் மார்பில் சாய்ந்தாள் மகாராணி.

“நான் தான் எழுந்து விட்டேனே…இன்னும் ஏன் துயரம்”என்று அவளை தட்டிக் கொடுத்து எழுந்தார்.
‘அரசே என்ன நேர்ந்தது?….எதனால் மயக்கமுற்றீர்கள்?….தாங்கள் இறந்து போய்விட்டதாக அல்லவா அரண்மனை வைத்தியர்கள் கூறினார்கள்’….என்று மகாராணி கேட்டாள்.

“அரண்மனை வைத்தியர் சொன்னது உண்மை தான்.நான் செத்ததும் உண்மை.இப்போது பிழைத்திருப்பதும் உண்மை…எனக்கு மிகவும் களைப்பாக உள்ளது.பிறகு பேசுவோம்….”என்று கூறி விட்டு ராணியுடன் சென்றார்.

அரண்மனையில் ஏற்பட்ட பரபரப்பிற்கும்,குழப்பத்திற்கும் அளவே இல்லை.அரசரே அதற்கு விளக்கமளித்தார்.

நகர சோதனைக்கு சென்ற இடத்தில் நந்தவத்திலுள்ள பூச் செடியிலுள்ள கூர்மையான முள் ஒன்று அதில் ஊர்ந்து கொண்டிருந்த கடும் விஷமுள்ள பாம்பு ஒன்றின் உடலில் குத்தியது.வலி தாங்காமல் சீற்றமுடன் திரும்பி பார்க்க எதிரில் இருந்த பூ தான் தனக்கு இடைஞ்சல் செய்கிறது என்று நினைத்து கொத்தி தன் விஷம் முழுவதையும் பூவில் இறக்கி விட்டு போய்விட்டது அந்த பாம்பு.

விஷத்தின் தன்மையை பற்றி அறியாத நான்.அப்பூவின் அழகில் மயங்கி,அதை பறித்து முகர்ந்தேன்.உடனே தலை சுற்றியது.கண்கள் இருண்டன.நான் இறந்து விட்டேன்.எப்படி பிழைத்தேன் என்பது எனக்கே தெரியவில்லை.
எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசி குணவதிக்கு மட்டும் சந்தேகம் துளிர் விட்டுக் கொண்டிருந்தது.

அரசர் தன் அருகில் இருக்கும் போது குணவதி இந்த உலகையே மறந்து விடுவாள்.அவர் அப்பால் சென்றதும் எல்லாவற்றையும் இழந்துவிட்டதாக தவிப்பாள்.ஆனால் அவள் மனதில் மட்டும் சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது.

வீரசேன திருமூலர் ஒரு ராஜரிஷியை போல ஆட்சி நடத்தினார்.இரவு பொழுதில் ராணி குணவதிக்கு தத்துவ உபதேசங்கள் செய்தார்.நாட்கள் சில கடந்தன.குணவதியோ தன் கணவருக்கு உண்டான வேறுபாட்டிற்கு என்ன காரணம் என்பதை ஆராயத் தொடங்கினாள்.

“என்ன ஆயிற்று இவருக்கு?…ஒரு போதும் தன்னை விட்டு விலகாதவர்,இப்போது கண்டாலே விலகி செல்வதேன்?தத்துவ உபதேசம் வேறு செய்கிறாரே?…செத்து போய் பிழைத்ததில் இருந்து இப்படி அடியோடு மாறிவிட்டாரே…..”

வழக்கம் போல் ஒருநாள் இரவு பொழுது வந்தது.அந்தப்புர அறைக்குள் வீரசேனர் நுழைந்ததும் ராணி தன் உள்ளத்திலுள்ளதை முன் வைத்தாள்.
“சுவாமி தாங்கள் யார்?…நாட்டையும் நாட்டு மக்களையும் அடியோடு மாற்றி விட்ட தாங்கள் யார்?தாங்கள் பழைய மகாராஜாவே இல்லை.இதை தங்களுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்தேன்”.

“உத்தம கற்புக்கரசியே! நான் உனக்கு உண்மையை சொல்கிறேன்

கேள்!”என்று நடந்தவை அணைத்தையும் கூறினார்.

“இன்று நீ வீரசேனனின் மனைவி.இந்த உடல் வீரசேனனின் உடல்.இது உனக்கு மட்டுமே சொந்தமானது.உன்னுடைய உடலை எனக்கு சொந்தம் என்று ஒருநாளும் நினைத்ததில்லை.அது வீர சேனனுடையது.நான் வெறும் ஆத்மா.உறவும் அதனால் உண்டான பிணைப்பும் உடலுக்கு மட்டுமே தவிர,உயிருக்கு கிடையாது.உன் கணவன் வீரசேனன் இறந்துவிட்டான்.அன்று நீயும் ஊர் மக்களும் அழுது புலம்புவதை கண்ட நான் மனமிறங்கியே வீரசேனனின் உடலில் புகுந்து கொண்டேன்.அதனால் தான்.வீரசேனனின் உடலோடு உன்னோடு பழகினேன்.தவறென்றால் என்னை மண்ணித்து விடு.”

“என் கணவனின் உடலில் புகுந்திருப்பது சித்த புருஷரா?…சுவாமி….தாங்கள்.என்றென்றும் இந்த உடம்பில் இருப்பீர்கள் அல்லவா?…”என்று குணவதி கேட்டாள்.
“அம்மா…உன் கணவரின் இந்த உடம்பு பஞ்ச பூதங்களால் ஆனது.அழிந்து போய் விடும்.அதனால் நான் இந்த உடம்பில் நிரந்தரமாக இருக்க முடியாது.சதுரகிரியில் உள்ள ஒரு குகையில் எனது காயகல்ப உடல் இருக்கிறது.இன்னும் கொஞ்ச நாளில் நான் இங்கிருந்து போய் விடுவேன்”என்று அவளுக்கு பதில் சொன்னார் வீரசேனன் உடம்பிலுள்ள திருமூலர்.

இதை கேட்டு திடுக்கிட்ட குணவதி அதை வெளியே காட்டிக் கொள்ளாமல்,சுவாமி தங்கள் உடம்பு மலையில் காவல் இல்லாமல் இருக்கிறதே….அதற்கு ஏதாவது ஆபத்து வந்து விட்டால் என்ன செய்வது?இதை தங்கள் மீது உள்ள அக்கரையினாள் கேட்கிறேன்”என்றாள் கண்ணீருடன்.

அவள் உண்மையில் அனுதாபத்துடன் தான் கேட்கிறாள் என்று நினைத்த திருமுலன் இரக்கத்தின் காரணமாக உண்மையை சொல்ல ஆரம்பித்தான்.

“கவலை படாதே!குணவதி அதை என் சீடன் குருராஜன் நன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறான்.எந்த விலங்கும் அதை நெருங்க முடியாது.காரணம் அது நெருப்பு மயமானது…அந்த கற்ப தேகத்தை சாதாரண தீயினால் எரித்துவிட முடியாது.குங்கிலியம்,வெடியுப்பு,வெங்காரம் இவற்றை இடித்து தூளாக்கி அந்த உடலில் பூசி பின் அவ்வுடலை விராலி இலையால் மூடி,விறகு வைத்து எரித்தால் தான் அது சாம்பலாகும்”என்று கூறி அவள் கண்ணீருக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ராணியின் சிந்தனை இப்போது வேறு விதத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது.நம் கணவர் இறந்து விட்டார்.இப்போது இருப்பதோ சித்த புருஷர்.இந்த உண்மை நம்மை தவிர வேறு யாருக்கும் தெரியாது.இவர் நம்மைவிட்டு பிரிந்து போய் விட்டால் ராணி என்கின்ற அந்தஸ்த்து போய்விடும்.நாம் விதவை கோலம் பெற நேரிடும்.மன்னரின் சிற்றன்னை மகனான தர்மார்த்தன் அரசனாவான்.தன் சுக போக வாழக்கையெல்லாம் நாசமாக போய்விடும்.அதன் பிறகு என் வாழ்க்கை கேள்விக் குறியாகி விடும்.என்ன செய்வது இப்போது?….

ஏன்?….எதற்க்கு?….என்று கேட்காமல் தான் சொல்வதை அப்படியே கேட்கும் அரண்மனை ஊழியர்களை அழைத்தாள்.சதுரகிரி மலை குகையில் வைத்திருக்கும் சித்தரின் உடலை தேடி கண்டுபிடித்து அழித்துவிடும் படி இரகசியமாக கட்டளை இட்டாள்.அரண்மனை விசுவாசிகள் இராணி சொன்ன செயலை அச்சு பிசங்காமல் செய்து முடித்து விட்டார்கள்.

குகையில் குருநாதரின் உடலுக்கு காவலனாய் இருந்த சீடன் குருராஜன் வருடக்கணக்கில் காத்திருந்து குருவிற்கு என்ன ஆயிற்றோ….என்று அவரை தேடி கொண்டு சென்ற வேளையில் இவ்வளவு வேலையும் செய்து முடிக்கப்பட்டு விட்டது.சித்தரின் காய கல்ப தேகம் அழிந்தது.இனிமேல் அவர் நம்முடனே இருப்பார் என்கின்ற சந்தோஷக் கடலில் மிகுந்த ராணி எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் எப்போதும் போல் திருமூலரிடம் இயல்பாகவே இருக்க ஆரம்பித்தாள்.
இராணியின் நடவடிக்கைகள் சித்தருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே ஒரு நாள் வேட்டைக்குப் போவது போல் கிளம்பி சதுரகிரி மலைக்கு சென்று தன் உடல் வைத்துள்ள இடத்திற்கு சென்றார்.வழியில் குருராஜன் எதிர்படவே அவனையும் அழைத்துக் கொண்டு குகைக்குள் சென்றார்.
காயகல்ப உடம்பை காணவில்லை சித்த புருஷர் நடந்தவற்றை உணர்ந்தார்.

குணவதி துரோகம் செய்திருந்தாலும் வீரசேனன் உடலில் இருக்கும் தான் அவளுக்கு துரோகம் செய்ய கூடாது என்று தீர்மானித்தார்.

அன்றிலிருந்து தத்துவ உபதேசங்கள் செய்வது நிறுத்தினார்.குணவதி எத்தனையோ முயற்ச்சி செய்தும்ஷபயனில்லை.உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன்னர் சிறிது காலம் ஓய்வு எடுத்துக் கொள்வார் என்றும்,அதனால் மகாராணியே நாட்டை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் பிரகடனம் செய்தார்.

அரசரின் இந்த பிரகடனம் அரசியை திடுக்கிட வைத்தது.திருமூலரிடம் சென்று “ஏன் இந்த திடீர் முடிவு?….”என்று வினவினாள்.

சித்தர் சிரித்து கொண்டரே தவிர பதில் சொல்லவில்லை.

இனியும் எதையும் மறைப்பதில் பயனில்லை என்று எண்ணிய மகாராணி தன் சுயநலச் செயலைக் கூறி தன்னை மன்னிக்கும் படி கண்ணீர் விட்டு அழுதார்.

குணவதியின் கண்ணீரை கண்டு மனம் இரங்கினார் திருமூலர்.அவள் நிலையில் இருந்து பார்த்தால் அவள் செய்தது சரியென்றே பட்டது.எந்த மனைவி தன் கணவனை பிரிந்து வாழ ஆசைப்படுவாள்?….இருந்தாலும் நம்பிக்கை துரோகம் கூடாதல்லவா?…இன்னும் சிறிது காலம் இருக்க கூடிய அவளை நாம் ஏன் நோகடிக்க வேண்டும் என்று எண்ணியவராய்,”சரி அழாதே…என்ன வரம் வேண்டும் கேள்”என்றார்.

ராணியும் தயங்காமல் சித்தர் என்றென்றும் வீரசேனன் உடலில் தன்னுடனே தங்கி விட வேண்டும் என்ற ஆசையில் தான் என்றைக்கும் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டும் என்று கேட்டாள்.சித்தரும் அவள் கோரிய வரத்தை அளித்தார்.

சித்தர் வாக்குப் பொய்க்காது அல்லவா?…இனி வீரசேன மகாராஜா தன்னை விட்டு போக மாட்டார் என்று மகிழ்ந்தாள் ராணி.ஒரு நாள் இரவு….ஊரே உறங்கி கிடந்தது.வீரசேன திருமூலர் யாருக்கும் தெரியாமல் அரண்மனையை விட்டு வெளியேறி சதுரகிரி நோக்கி போனார்.பொழுது பு புலரும் வேளை.நதியில் நீராடிக் கரை ஏறியவர் அங்கே அந்தனர் ஒருவர் அசையாமல் கற்சிலையை போல் உட்காந்திருப்பதை பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்து வியப்படைந்து அவனருகே சென்று பார்த்த போது அவன் கண்கள் நிலைத்து போய் இருப்பதை கண்டார்.மூச்சு இயங்கவில்லை.தொட்டவுடனே அவன் உடல் அப்படியே கீழே விழுந்தது.ஆம்.அவன் எப்போதோ இறந்து விட்டிருந்தான்.

ஜம்புகேஸ்வரம் எனும் திருவானைக் கோவிலில் இருந்த ஜம்புகேஸ்வரர் என்னும் அந்த அந்தணன் பிராணயாமப் பயிற்ச்சியை மேற்கொள்வதற்காக சதுரகிரியை அடைந்து குருவின் துணையின்றி முரட்டுத்தனமாகப் பயிற்சியை மேற்கொண்டான்.தன்னை அடக்க முயன்றவனை அடக்கி விட்டு மூச்சு பறந்து விட்டது.

வீரசேனன் தன் அரச உடம்பை விட்டு விட்டு அந்தண உடம்பில் நுழையத் தீர்மானித்தார்.

கூடவே குணவதிக்குத் தாம் அளித்த வாக்குறுதியும் நினைவுக்கு வந்தது.வீரசேனன் உடலை சிரஞ்சீவத் தன்மை உடையதாக்க நினைத்தார்.அப்போது தானே அவள் நித்திய சுமங்கலியாக இருக்க முடியும்.

அரச உடலை எங்கே விட வேண்டும் என்று தீர்மானித்த போது அங்கிருந்த “யானை உண்டி”எனும் பெருத்த மரமொன்று தென்பட்டது.அந்த மரத்தில் பெரிய பொந்து ஒன்று தென்பட்டது.

வீரசேனத் திருமூலர் மர பொந்துக்குள் நுழைந்து உட்கார்ந்தவர் மன்னரின் உடலை அங்கேயே விட்டு விட்டு ஜம்புகேஸ்வரம் உடம்பில் நுழைந்தார்.(இது அவரின் மூன்றாவது உடம்பில் கூடு விட்டு கூடு பாயும் செயல்).

ஜம்புகேஸ்வர திருமூலர் எழுந்தார்.எழுந்ததும் ஜோதி மரத்தின் பூக்களை பறித்து,அதனுடன் சில மூலிகைகளை சேர்த்து நன்றாக குழைய அரைத்து அந்தக் கரைசலில் மந்திர சக்தியை ஏற்றி கரைசலை மரப் பொந்திலுள்ள அரசனின் உடலில் பூசினார்.மரத்தின் மேற்புறத்தை மரப்பட்டைகள்,இலைகள்,கிளைகள் முதலியவற்றை கொண்டு மூடினார்.பின்னர் சில மந்திரங்களை உச்சரித்தவுடன் மர பொந்து மூடிக் கொண்டது.

இனிமேல் யாரும் இந்த அரசனின் உடம்பைப் பார்க்க முடியாது.அரச உடம்பு இருக்கும் மரம் அரச மரம் என்றே அழைக்கப்படும் என்று சொல்லி விட்டு சதுரகிரியில் ஒரு குகைக்குள் இருந்து சானைகள் பல செய்து மறுபடியும் தேகத்தைக் காய கல்ப தேகமாக ஆக்கிக் கொண்டார்.

சதுரகிரியில் குருராஜனுடன்(சீடன்) சேர்ந்து இன்னும் பல சீடர்கள் அவரிடம் சேர்ந்தனர்.சதுரகிரி ஒரு தவச்சாலையாக திகழ்ந்தது.ஜம்புகேஸத் திருமூலர் அவர் நல்வழி காட்டினார்.இன்னும் அவர் சதுரகிரியில் இருப்பதாக பெரியோர்கள் சொல்லக் கேள்வி.

வீரசேன திருமூலரை பிரிந்து வருத்த முற்றிருந்த குணவதி ஒருவாறு தன்னை தேற்றிக் கொண்டு தர்மார்த்தன் -தனமதி,ஆரசேனன்-சுகமதி முதலியோருடன் சதுரகிரி மலையில் இருக்கும் ஜம்புகேஸ்வர திருமூலரை தரிசிக்க சென்றாள்.

ஜம்புகேஸ்வர திருமூலர் தாம் யாரென்று அவளுக்கு தெரியாத நிலையில் அவளது குறைகளை கேட்டறிய அவள் தன்னை விட்டு பிரிந்த சித்தயோகியான தன் கணவரை பற்றி விபரம் தமக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்,மீண்டும் அவருடன் சேர்ந்து வாழ வழி செய்யுமாறு வேண்டினாள்.

மீண்டுமொரு பந்தத்தை தொடர விரும்பவில்லை ஜம்புகேஸ்வர திருமூலர்.அவள் கணவர் தம் சக்தியால் அரசமரமாக உருமாறியுள்ளான் என்றும் அவள் அரசமரத்தை பூஜை செய்வதினால் அவள் பதி சேவையை அடைந்ததன் பலனை அடைய முடியும் என்று அருளாசி வழங்கினார்.

தான் செய்த சிறு தவறு தன் வாழ்க்கையில் மிகப் பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதை எண்ணி வருந்திய குணவதி அந்த அரச மரத்தினை வணங்கி,பல முனிவர்களையும் தரிசித்து விட்டு பின் நாடு திரும்பினாள்.
மேருமலை வடபாகத்தில் மடையை அடுத்திருந்த வனத்தில் தாருமூலர் யாகம் செய்தார்.உலக ஆசைகளை துறந்து வினைபயன்களையும் விட்டு,தமக்கு தொண்டு புரிந்த சித்தர்களுக்கும்,மார்கண்டேயனுக்கும்,கண்ணபிரானுக்கும் உபதேசம் செய்தார்.

…யடவிடக்கும் சென்று தானும்
பண்டுளவு கிருஷ்ண பூபாலனுக்கு
பார்தனில் உபதேசம் செய்தார்…

கிருஷ்ணன் இருந்த துவாபரயுகத்தில்,மகாபாரத காலத்தில் திருமூலரும் இருந்தார் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
திருமூலர் கைலாயத்திலிருந்து புறப்பட்டு வரும் வழியில் மகாநதி( பூரி ஜெகன்னாதம்)அருகில் துவாரபுரி அரசன் கண்ணன் ஒரு வேடனால் கொல்லப்பட்டு,அவ்வேடன் கண்ணனின் உடலை சிதையில் வைத்து கொளுத்தி விட்டு போய் விட,உடனே பெருமழை பெய்ய கருகிய கால்களை உடைய கண்ணனின் உடம்பானது வெள்ளத்தால் அடித்து கொண்டு போகபட்டு பூரிக்கு பக்கத்தில் கரை ஒதுங்கியது.அவ்வூரார் கண்ணனை இனம் கண்டு அடக்கம் செய்து கோவில் அமைத்தார்கள் என்றும் அதுவே பூரி ஜெகன்னாதர் கோவில் என்றும் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை திருமூலரே கண்டதாகவும் சொல்லப்படுகிறது.புராணங்களிலும் இதிகாசங்களிலும் இல்லாத இச் செய்தியை அகத்தியர் மட்டுமே தருகிறார்.திருமூலர் எண்ணாயிரம் திருமந்திரம் இயற்றியதாக அகத்தியர் தமது கௌடிய சாரகம் என்னும் நூலில் கூறியுள்ளார்.அகத்தியர் 12000 முதல் காண்டத்தில் திருமூலர் இயற்றிய நூல்கள் காணப்படுகின்றன.

Share