பாம்பாட்டி சித்தர்

பாம்பாட்டி சித்தர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார் படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால் இப்பெயர் அமைந்தது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.

பாம்பாட்டி சித்தர் கூடுவிட்டு கூடு பாய்ந்து சில ஞான உபதேசங்களை உபதேசித்தார். சித்தர்கள் இச்சித்தியை உயர்ந்த நோக்கத்திற்காக மட்டுமே பயன்படுத்தினர் என்பது நினவில் கொள்ளத்தக்கது.

ஒரு ஊரில் இறந்து போன மன்னனைச் சுற்றி மனைவி சுற்றத்தார் அழுது புலம்பிக்கொண்டிருந்தனர். கொடுங்கோலாட்சி புரிந்த தீய நடத்தை கொண்டிருந்தவன் மன்னன். அப்படியும் மக்கள் அவன் மேல் வைத்த பாசம் ஆச்சரியம் தந்தது. அவனை நல்லவனாக்கி நடமாடவிட்டு, நல்ல உபதேசம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து, தன் உடலை பத்திரப்படுத்திவிட்டு, இறந்து போன பாம்பு ஒன்றை அரசன் உடலில் விசிறியடிக்கிறார். மக்கள் எல்லோரும் பீதியுடன் விலக அரசி மட்டும் உடலை விட்டு நகராது நிற்கிறார். அதன் பின் அரசன் உடலில் பாம்பாட்டி சித்தர் புகுந்து கொண்டார்.

பாம்பு தான் அரசனை கொன்றுவிட்டது என்று அதனை அடிக்க மக்கள் புறப்படுகின்றனர். அரசன் உடல் தாங்கி எழுந்த சித்தர் “செத்த பாம்பை ஏன் அடிக்கிறீர்கள்? என்று அதனை தடவி கொடுத்து ” பாம்பே நான் எழுந்து விட்டேன், நீயும் எழுந்திரு” என்றார்.

ஆடு பாம்பே என்று பாம்பை ஆட்டுவித்து தத்துவங்கள் நிரம்ப பாடல் பாடுகிறார். அரசிக்கு வந்திருப்பது வேறு ஒரு நபர் என்ற
சந்தேகம் உதித்தது.

நாடுநகர் வீடு மாடு நற்பொருள் எல்லாம்
நடுவன் வரும்போது நாடிவருமோ
கூடுபோன பின்பு அவற்றால் கொள்பயன் என்னே?
கூத்தன் பதங்குறித்தி நின்று ஆடு பாம்பே

முக்கனியும் சக்கரையும் மோதகங்களும்
முதிர்சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய்
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க
மெய்யாக கண்டோமென்று ஆடு பாம்பே

செல்வமும், புகழும், படை பலமும், இறப்பும் காலனும் தேடி வரும் போதும் கூட வருமோ? கூடு விட்டே ஆவி பொனால் அவற்றின் பயன் தான் என்ன என்று ஆடு பாம்பே

முக்கனி சக்கரை பத்து வகை பட்சணங்கள் உண்ட வாய், இப்போது மண்ணைக் கவ்வும் நிலை குறித்து, உடலின் நிலையற்ற தன்மை நினைந்து எழுந்தாடு பாம்பே என்பது  விளக்கம்.