போகர்

போகர் பதினெண் சித்தர்களுள் ஒருவர் ஆவார். இவர் பிறப்பால் தமிழர். தமிழ்நாட்டில் பிறந்து பின்னர் சீனா சென்றவர் என்று சிலர் கூறுகின்றனர். இவர் நவசித்தர்களுள் ஒருவரான காலங்கி நாதர் சீடர் ஆவார். போகரின் சீடர் புலிப்பாணி ஆவார். சீனாவில் போகர் போ-யாங் என்று அறியப்படுகிறார்.சீன தேசத்தில் துணிகள் வெளுத்து துவைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தவர் போகர் . இவர் புலிப்பாணியின் குரு.

ஒருநாள் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் போகர் . ஒரு புற்றிலிருந்து ஒளிக்கற்றை வருவதைப் பார்த்து அருகில் சென்றபோது உள்ளே ஒருவர் தியானம் செய்வதை அறிந்து வெளியே அமர்ந்து இவரும் தியானத்தில் இருந்தார். இவர் தியானத்தால் அவரின்தியானம் கலைந்தது. புற்றிலிருந்து வெளியே வந்த  காலங்கி நாதர் போகா எதிரிலிருக்கும் மரத்தின் பழத்தை உண்டால் வாழ்நாள் முழுவதும் பசி எடுக்காது. நரை திரை மூப்பு வராது. தவம் செய்ய துணை செய்யும். என்று புலித்தோல் ஆசனம் ஒன்றைக் கொடுத்து இது உனக்குத் தவம் செய்ய பயன்படும் என்றார். அப்போது ஒர் பதுமை தோன்ற மேல்கொண்டு உனக்குத் தேவையானவைகளை இப்பதுமை சொல்லும் எனக் கூறிமறைந்தார். பழத்தைச் சாப்பிட்டார். பதுமை மூலிகை ரகசியங்கள், உயிரின் தோற்றம், அது உடல் எடுக்கும் விதம், அந்த உடலில் அது படும் துன்பம், ஆகியவைகளை தெளிவாக சொல்லக்கேட்ட போகர் ஆச்சரியத்தில் இருக்கும்போது அது மறைந்தது.

போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர்முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம், முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார்.

போகர் கனவில் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாஷாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். பழனிமலை இறைவன் திருமேனியைத் தழுவி ஊறி வந்த பஞ்சாமிர்தத்தையே உணவாகக் கொண்டார். ஒன்பது விதமான விஷங்களை (நவ பாஷாணங்கள்) முயன்று கூட்டி உருவாக்கிய திருமேனியில் ஊறிய விபூதியும், பஞ்சாமிர்தமும் போகருக்கு உள்ளொளியைப் பெருக்கியது.

இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரனை உருவாக்கியவரும் போகரே என்றும் கூறுவதுண்டு.

பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது.

போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்றிருப்பதாக கூறப்படுகிறது.

போகர் ஏழாயிரம், 700 யோகம், போகர் நிகண்டு மற்றும் 17000 சூத்திரம் ஆகிய நூல்கள் போகரால் இயற்றப்பட்டவை

 

Share