பிரபஞ்ச உற்பத்தி

பிரபஞ்ச உற்பத்தி

எங்கும் நீர் சூழ்ந்திருக்க, பிரம்மனாகிய பகவான் விஷ்ணு யோகதுயில் கொண்டிருந்தார். நீருக்கு நர என்றும், அயன என்றால் படுக்கை என்றும் பொருள். எனவே விஷ்ணுமூர்த்தி நாராயணன் என்று பெயர் பெற்றார். நீரிலிருந்து ஓர் அண்டம் (முட்டை) வெளித்தோன்றியது. அதனுள் பிரம்மா இருந்தார். அவர் சுயம்பு ஆவார். அவர் முட்டையின் இருபகுதியிலிருந்து சுவர்க்கத்தையும், பூமியையும் ஆக்கினார். அவ்விரண்டிலும் ஆகாயம், திக்குகள், காலம், மொழி, உணர்வுகள் உற்பத்தி செய்யப்பட்டன. பிரம்மாவின் மனதிலிருந்து மரீசி, அத்திரி, ஆங்கிரசர், புலஸ்தியர், புலஹர், கிரது, வசிஷ்டர் என்ற சப்தரிஷிகளைத் தோற்றுவித்தார். பின்னர் ருத்திரனையும், சனத் குமாரரையும் தோற்றுவித்தார்.

மேலும் சில படைப்புகள்: பிரம்மா ஓர் ஆணையும், ஒரு பெண்ணையும் படைத்து அவர்கள் மூலம் மக்கள் பெருக்கத்துக்கு வித்திட்டார். ஆணின் பெயர் சுவயம்புமனு; பெண்ணின் பெயர் சதரூபை. இவர்களின் புத்திரன் மனு. மனுவிலிருந்து வளர்ந்த மக்கள் மானிடர்(அ) மானவர் எனப்பட்டனர். அத்தம்பதியருக்கு வீரன், பிரியவிரதன், உத்தானபாதன் என்று மூவர் பிறந்தனர். உத்தானபாதனின் மகன் துருவன், துருவ நக்ஷத்திரமாக விளங்குகிறார். துருவன் பரம்பரையில் தோன்றிய பிராசீனபர்ஹிக்கு பிரசேதனர்கள் எனப்படும் பதின்மர் பிறந்தனர். அவர்களுக்கு உலக வாழ்க்கையில் விருப்பமின்றித் தவம் செய்யப் புறப்பட்டனர். உலகைப் பராமரிக்க ஆள் இல்லாததால் எங்கும் காடுகள் பெருகி விட்டன. பிரசேதனர்கள் கோபம் கொண்டு வாயுவையும், அக்கினியையும் தோற்றுவித்துக் காடுகளை அழித்தனர். அப்போது சோமன், ஓர் அழகிய பெண் மரீஷையுடன் பிரசேதனர்களை அணுகி, அவர்கள் கோபத்தை சாந்தமாக்கி மரீஷையை மனம் செய்வித்தார். அவர்களுடைய மகனே தக்ஷபிரஜாபதி.

Share