வள்ளலார்

வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்ட  இராமையா  பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

தன் வாழ்வின் பெரும்பகுதியைச் சென்னையில் கழித்த இவர், நவீன சமுதாயங்களின் பிரச்சினைகளை உணர்ந்திருந்தார். அனைத்துச் சமய நல்லிணக்கத்திற்காகவும் சன்மார்க்கத்திற்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துப் பணியாற்றினார். இந்நோக்கத்தை அடையும் பொருட்டு சிதம்பரம் அருகே உள்ள வடலூரில் சத்திய ஞானசபையை அமைத்தார். 1867ஆம் ஆண்டில் சத்திய தரும சாலையையும் நிறுவினார்.

 

பத்தென்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில், சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும் வித்தையைக் கற்க முற்பட்டு. அம் முயற்சியில் தமது பெருஞ்செல்வம் அனைத்தையும் இழந்தார்.
ஒரு நாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க அடிகளார். சென்றார். அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச் சென்று, அவர்தம் கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையை யெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார். தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக் கொடுக்குமாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார். வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறைய தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத் தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல் தண்ணீருக்குள் விழுந்தது. தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட மாஜி செல்வந்தர், அந்த வித்தையைத் தனக்குக் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
வள்ளலார் சொன்னார்: இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான். ஆனால் ஒன்றே ஒன்று, மண்ணாசை, பொன்னாசை,பெண்ணாசை அறவே அற்ற வர்களுக்கு மட்டுமே இந்த வித்தை பலிக்கும் என்றார்
உடல் வேறு! உயிர் வேறு ! ஆன்மா வேறு !

வள்ளலார் தருமச் சாலையின் வெளியே உச்சிப் பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத் தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.

இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது. இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.
ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ் வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.
உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகத்தை எழுப்பி, “இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!” என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.
ஞானசபையில் வழிபாடு தொடங்கியபோது, வள்ளலார் தன் கையால் ஒரு அகல்விளக்கை ஏற்றிவைத்தார். அது அணையாத்தீபமாக இன்றுவரை பராமரிக்கப்படுகிறது.1874ல் தை மாதம் 19ம் தேதி வெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரத்தில் மேட்டுக்குப்பத்தில் உள்ள சித்திவிளாக திரு மாளிகைக்குள் நள்ளிரவு 12 மணிக்குச் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்.அதுவே சித்தி என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்.அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வாகும்.அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் என்பதாகும்.இவை அனைத்தும் பெற்ற ஒரே ஒரு அருள் ஞானி ,அருளாளர் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

நாமும் அவர் காட்டிய வழியில் சென்று அவரைப்போல் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிபெருங்கருணை அருட்பெருஞ்சோதி
Share