வியாக்கரபாதரும் பதஞ்சலியும்

மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான். மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூசையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார். மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர். மழமுனிவர் சிவபூசை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும். அதனை எண்ணி வேதனைப்படுவார். சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது.
விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன். அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார்.

ஒருசமயம், வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என்றார்.அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடனதரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.

Share