பட்டிணத்தார் பாடிய பிறப்பிலிருந்து இறப்புவரை (உடல் கூற்று வண்ணம்)

பட்டிணத்தார் பாடிய பிறப்பிலிருந்து இறப்புவரை (உடல் கூற்று வண்ணம்)

1.    ஒருமடமாதும் ஒருவனும்ஆகி இன்பசுகம் தரும்
அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணிதம் மீதுகலந்து-

2.    பனியில்ஓர் பாதி சிறுதுளிமாது பண்டியில்வந்து
புகுந்துதிரண்டு பதும அரும்பு கமடம்இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற-

3.    உருவமும்ஆகி உயிர்வளர்மாதம் ஒன்பதும் ஒன்றும்
நிறைந்துமடந்தை உதரம் அகன்று புவியில்வி ழுந்து
யோகமும்வாரமும் நாளும் அறிந்து-

4.    மகளிர்கள் சேனை தரவணையாடை மண்படஉந்தி
உதைந்துகவிழ்ந்து மடமயில்கொங்கை அமுதம்அருந்தி
ஓரறிவீ ரறி வாகிவளர்ந்து-

5.    ஒளிநகைஊறல் இதழ்மடவாரும் உவந்துமுகந்திட
வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைபொழிந்து
வாஇருபோவென நாமம்விளம்ப-

6.    உடைமணி ஆடை அரைவடம் ஆட உண்பவர் தின்பவர்
தங்களொடுஉண்டு தெருவில் இருந்த புழுகி அளைந்து
தேடியபாலரோ டோடிநடந்து
அஞ்சுவயதாகி விளையாடியே

7.    உயர்தருஞான குருஉபதேசம் முத்தமிழின்கலை
யும்கரைகண்டு வளர்பிறைஎன்று பலரும்விளம்ப
வாழ்பதினாறு பிராயமும்வந்து-

8.    மயிர்முடிகோதி அறுபதநீல வண்டிமிர் தண்தொடை
கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கும் பணிகள் அணிந்து
மாகதர்போகதர் கூடிவணங்க-

9.    மதன சொரூபன் இவன் எனமோக மங்கையர் கண்டு
மருண்டு திரண்டு வரி விழிகொண்டு சுழிய எறிந்து
மாமலர் போல் அவர் போவது கண்டு-

10.    மனது பொறாமல் அவர் பிறகோடி மங்கல செங்கல
சந்திகழ் கொங்கை மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி-

11.    ஒரு முதலாகி முதுபொருளாய் இருந்ததனங்களும்
வம்பில் இழந்து மதனசுகந்த விதனம்இதென்று
வாலிபகோலமும் வேறு பிரிந்து-

12.    வளமையும்மாறி இளமையும்மாறி வன்பல்வி ழுந்துஇரு
கண்கள் இருண்டு வயது முதிர்ந்து நரைதிரை வந்து
வாதவி ராத குரோதம் அடைந்து-
செங்கையினில் ஓர் தடியும் ஆகியே

13.    வருவதுபோவது ஒருமுதுகூனும் மந்தியெனும்படி
குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாயறியாமல் விடாமல் மொழிந்து-

14.    துயில்வரும்நேரம் இருமல் பொறாது தொண்டையும் நெஞ்சமும்
உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
தோகையர் பாலர்கள் கோரணி கொண்டு

15.    கலியுகமீதில் இவர் மரியாதை கண்டிடும் என்பவர்
சஞ்சலம் மிஞ்ச கலகல என்றுமலசலம் வந்து
கால்வழி மேல்வழி சாரநடந்து-

16.    தெளிவும்இராமல் உரை தடுமாறி சிந்தையும் நெஞ்சமும்
உலைந்து மருண்டு திடமும் உலைந்துமிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதெனநொந்து-

17.    மறையவன் வேதன் எழுதியவாறு வந்தது கண்டமும்
என்று தெளிந்து இனி என கண்டம் இனியென தொந்தம்
மேதினி வாழ்வு நிலாதினி நின்ற-

18.    கடன் முறை பேசும் என உரைநாவுறங்கி விழுந்துகை
கொண்டு மொழிந்துகடைவழிகஞ்சி ஒழுகிட வந்து
பூதமும் நாலுசு வாசமும் நின்று-
நெஞ்சுதடுமாறி வரும்நேரமே-

19.    வளர்பிறை போல எயிறும் உரோமமும் சடையும் சிறு
குஞ்சியும் விஞ்ச மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலை போல்யம தூதர்கள் வந்து-

20.    வலைகொடுவீசி உயிர்கொடு போக மைந்தரும் வந்து
குனிந்தழ நொந்து மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து-

21.    பழையவர்காணும் எனும்அயலார்கள் பஞ்சு பறந்திட
நின்றவர் பந்தர் இடுமென வந்து பறையிட முந்த
வேபிணம் வேக விசாரியும் என்று-

22.    பலரையும் ஏவி முதியவர் தாமிருந்தசவம் கழு
வும் சிலரென்று பணிதுகில் தொங்கல் களபமணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை-

23.    வரிசை கெடாமல் எடுமென ஓடி வந்திளமைந்தர்
குனிந்து சுமந்து கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிடவாழ்வென வாழ்வென நொந்து-

24.    விறகிடமூடி அழல்கொடு போட வெந்து விழுந்து
முறிந்து நிணங்கள் உருகி எலும்பு கருகி அடங்கி
ஓர்பிடி நீறும் இலாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே!

Share