சித்தர் சிவ வாக்கியரின்

சித்தர் சிவ வாக்கியரின்

சித்தர் சிவ வாக்கியரின் சிந்தனைகள்

நானா தேது? நீய தேது? நடுவில் நின்றது ஏதடா?
கோனதேது? குருவதேது? கூறிடும் குலாமரே
ஆனதேது? அழிவதேது? அப்புறத்தில் அப்புறம்
ஈனதேது? ராம ராம ராம என்ற நாமமே. 13

நான் என்று ஆனது எது? நீ என்பது எது? ஞாமாகி நமக்குள் நடுவாக நின்றது எது? கோனாகி இவ்வுடலை ஆட்சி செய்வது எது? குருவாக அமைந்திருப்பது எது? அது என்பதை எதுவென்று கூறிவிடுங்கள் எமக்குள் மக்களே! ஆதியாக ஆனது எது? அது நம் உடம்பில் அழியாத பொருளாய் நின்றது எது? அது நம் உடம்பிலேயே அப்புரத்துக்கும் அப்புறமாய் வெளியாக நின்ற உடல் அழிந்த பிறகும் கூட வருவது எது என்பதை நன்கு சிந்தித்து அறிந்து கூறுங்கள். இவை யாவும் ஒன்றே என அறிவை அறியவைத்து நம் பிறவியை ஈடேற்ற சரியானது இராம நாமமே என்பதை உணர்ந்து இராம மந்திரத்தை ஓதுங்கள்.

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே
வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ
மாத்திரைப் போதும்முளே யறிந்து தொக்க வல்லிரேல்
சாத்திரப்பை நோய்கள் ஏது சத்திமித்தி சித்தியே. 14

சாஸ்திரங்கள் வேத பாராயணங்கள் போன்றவைகளை தினமும் ஓதுகின்ற சட்டநாதப் பட்டரே! உங்களுக்கு நோய்வேர்த் வந்து மாரடைப்பு ஏற்பட்டு வேர்த்து இறைத்து உயிர் ஊசலாடும்போது நீங்கள் சொல்லி வந்த வேதம் அந்நேரம் வந்து உதவுமோ? உதவாது. ஆதலால் ஒரு நொடி நேரமாவது உங்களுக்குள்ளே உள்ள மெய்ப்பொருளை அறிந்து வாசியோகம் செய்து அதையே தொக்கியிருந்து தியானம் செய்து வந்தீர்களானால் சோற்றுப் பையான இவ்வுடம்பிற்கு நோய் என்பது வராது. மரண காலத்திலும் ஈசன் கருணையினால் சக்தியும் முக்தியும் சித்தியும் கிடைக்க மெய்ப்பொருளை அறிந்து தியானியுங்கள் தினம்தினம் தாங்கள் சொல்லி வந்த வேத சாத்திரங்களுக்கு அதனால் சக்தி கிட்டி முக்தி பெற்று சித்தி அடைவீர்கள்.

தூரம் தூரம் தூரம் என்று சொல்லுவார்கள்
சோம்பர்கள்
பாரும் விண்ணும் எங்குமாய்ப் பரந்த அப்பராபரம்
ஊரு நாடு காடு தேடி உழன்று தேடும் ஊமைகள்
நேரதாக உம்முள்ளே அறிந்துணர்ந்து கொள்ளுமே.

இறைவன் வெகு தூரத்தில. இருக்கின்றான் என்றும் அவனை ஆன்மீக நாட்டம் கொண்டு அடையும் வழி வெகுதூரம் என்றும் சொல்பவர்கள் சோம்பேறிகள். அவன் பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைந்து மண்ணாகவும், விண்ணாகவும், எங்கும் பறந்து இருக்கின்றான். அவனை பல ஊர்களிலும் பல தேசங்களிலும் பற்பல காடுகளிலும் மலைகளிலும் உழன்று அலைந்து தேடும் ஊமைகளே! ஆவ்வீசன் உனக்குள் உள்ளதை உணர்ந்து முதுதண்டு வளையாமல் நேராக பத்மாசனத்தில் அமர்ந்து தியானித்து அறிந்து கொள்ளுங்கள்.

நாலு வேதம் ஓதுவீர் ஞான பாதம் அறிகிலீர்
பாலுள் நெய் கலந்தவாறு பாவிகாள் அறிகிலீர்
ஆழம் உண்ட கண்டநீர் அகத்துளே இருக்கவே
காலன் என்று சொல்லுவீர் கனவிலும் மஃது இல்லையே. 16

ரிக் யஜூர், சாம அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் நன்றாக மனப்பாடம் செய்து ஓதுவீர்கள். ஆனால் அந்த நான்கு வேதங்களும் சொல்லும் ஞான பாதம் எது என்பதை அறிவீர்களா? அமுதம் வேண்டி திருப்பார் கடலை கடையும்போது,ஆதிசேசன் கக்கிய ஆலகால விஷத்தை உண்டு அவனியைக் காத்த நீலகண்டன் நம் உள்ளத்தில் இருப்பதையும் ஞானபாதம் எனும் மெய் பொருளை அறிந்தவர்க்கும் காலன் என்ற எம் பயம் கிடையாது. அதை அறிந்து அதையே எண்ணி தியானிப்பவர்களுக்கும் கனவில் கூட எம பயமோ வேதனையோ இருக்கவே இருக்காது.

Share