ஈசனின் பல உருவங்கள்

ஈசனின் பல உருவங்கள்

ஒரு நாமம் ஓரூருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ
-மாணிக்கவாசகர்

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருட்சோதி. பிரணவ வடிவன், ஞானச்சொரூபன் ஆகிய ஈசனுக்கு அவரவர் செய்யும் கருமம், அவரவர் இச்சைக்கேற்ப விளங்கிடும் பற்பல உருவங்களைக் காண்போம்.

  1. ஈசனின் தலை சுவர்க்கம்; ஆகாயம் தொப்புள்; சூரியன் சந்திரன், அக்கினி-முக்கண்கள்; திக்குகள் செவி; பாதாளம் திருவடி, விண்மீன்கள், முத்துக்களாலான ஒரு மணி மாலை, விண்ணவர்கள் புயங்கள், அலைகடல்கள் ஆடை, ஞானம் ஒளி; மேகங்கள் ஜடாபாரங்கள்; வாயு-மூச்சு; பிரகிருதியே தேவி என்று இயற்கை வடிவில் ஈசனைக் காண்பர். அவர் முகத்திலிருந்து அந்தணர், தோள்களிலிருந்து இந்திரன், உபேந்திரன்; தொடையிலிருந்து வணிகர்கள், மற்றவர் பாதங்களிலிருந்து தோன்றினர். விருப்புடன் சிவபெருமான் சில உருவங்களைத் தாங்கினார்.
  2. தியானத்தின் மூலம் உயர்ந்தோர் தம் சிந்தையில் கண்டு, ஒளிமயமான அப்பெருமானை வழிபட்டு குழகனே அருளாம் என்று வந்தனை செய்வர். அந்த லிங்கம் வாயிகலிங்கம் ஆகும்.
  3. பரமன் உமாதேவியோடும், முருகனுடனும், பிறை அணிந்தவனாக காணப்படுவது சோமாஸ்கந்த மூர்த்தி ஆகும்.
  4. திரிசூலம் தாங்கி நான்கு கரங்கள், மூன்று கண்கள், ஏக பாதத்துடன் விளங்குபவர் ஏகபாத மூர்த்தி எனப்படுபவர்.
  5. இரு முகம், ஏழு புயம், மூன்று பாதங்கள் கொண்ட வடிவம் யஞ்ஞ தேவன்.
  6. உமாமகேசுவரராக ரிஷபாமூர்த்தியாகத் தோன்றுவது ஓர் உருவம்.
  7. நந்தியுடன், சிவகணங்கள் பரமனைப் பணிந்து வணங்கிடும் உருவம் கண் கொள்ளாக் காட்சி ஆகும்.
  8. ஒரு கையில் உடுக்கை, மற்றொன்றில் தீ, தூக்கிய பாதம், ஒரு கை தொங்க, மற்றொன்று அபயகரமாக நடனமாடும் உருவம் நடராஜர் ஆகும்.

9-12 . மேலும் ஈசன் கொண்ட பஞ்சத்தோற்றங்கள் வாமதேவம், தத்புருஷம், அகோரரூபம் ஆகியவை.

  1. இடுப்பில் சிங்கத்தின் தோல், புயங்களில் பொன்னகைகள், மார்பில் சங்குமணி ஆரம், ஜடையிலே பிறைமதி, கையில் குருதியுடன் கூடிய கபாலம் கொண்ட உரு ஒன்று.
  2. அபயக்கரம், வரதஹஸ்தம், சூலமேந்திய கரம், தாமரைக் கொண்ட கரம் என்று நான்கு கைகளுடன் உள்ள உருவம்.
  3. நெற்றிக்கண் தீ கக்க, மண்டையோட்டு மாலை அணிந்து, அயன், அரி, அரவம் கையில் பற்றி சுடுகாட்டில் வெண்ணீறு பூசி ஆடும் நடன உருவம்.
  4. ஜலந்தரனைக் கால் கட்டை விரலால் பூமியில் வட்டம் எழுதி, அச்சக்கரத்தால் அவன் உயிர் வாங்கி ஜலந்தாரசுர வதமூர்த்தி வடிவம்.
  5. கூரிய சூலம் தாங்கி, தேவியை அணைத்து லிங்கத்திலிருந்து தோன்றி காலனை அழித்த கால சம்ஹாரமூர்த்தி உருவம்.
  6. தேவர்கள் அமைத்த தேரிலே இருந்து முப்புரங்களைச் சிரிப்பினால் எரித்துச் சாம்பலாக்கிய திரிபுர தகனமூர்த்தி உருவம்.
  7. வேலவனை இடது தொடையில் அமர்த்தி அருள் புரியும் குகானுக்கிரக மூர்த்தி.
  8. அவ்வாறே விநாயகரை சுமந்திருக்க காணப்படும் விநாயக அனுக்கிரக மூர்த்தி.
  9. சப்த மாதர்களுக்கு அனுக்கிரகம் செய்த சப்தகன்னியர் அனுக்கிரக மூர்த்தி.
  10. காளியாகிய துர்க்கைக்கு அருள்புரியும் துர்க்கானுக்கிரக மூர்த்தி மற்றும் ஜோதிலிங்க மூர்த்தி, தக்ஷிணாமூர்த்தி, பைரவ மூர்த்தி போன்றவைகளே அன்றி ஈசன் விளையாட்டாக கொண்ட கோலங்கள் எதையும் வடிவுற அமைத்து வழிபடுவோர் எம்பெருமான் பேரருளுக்குப் பாத்திரராகி வினைகள் நீங்கப்பெற்று என்றென்றும் அவன் திருவடி நிழலிலே வாழ்ந்திருக்கும் பேறு பெறுவர்.

 

Share