கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள்.

கிருதயுகம்
——————
கிருத யுகத்தில் மக்கள் ஈசன் திருவடியை எப்போதும் துதி செய்த வண்ணம் இருப்பர். தரும தேவதைக்கு நான்கு கால்கள் இருக்கும். அனைவருக்கும் வாழ்நாள் ஒரே அளவில் இருக்கும். வருண பேதங்கள் இன்றி, மக்கள் மகிழ்ச்சியோடு இருப்பர். ஆசிரம வேறுபாடுகள் இல்லை. ஞானம் தெளிந்தவர்களாய் பரமன் அருளுக்குப் பாத்திரங்களாக இருப்பர். எங்கும் எல்லாம் இன்பமயம். மக்கள் சாத்துவிக குணம் உடையவர்களாய் பொறாமை, பொச்சரவு முதலியன இன்றி எல்லா உலகுக்கும் செல்லலாம்.

திரேதா யுகம்
———————
திரேதா யுகத்தில் சிறந்த யாகங்கள் புரிவர். தரும தேவதை ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருக்கும். மழை பொழியும். மரம், செடி, கொடிகள் நன்கு வளர்ந்து காய் கனிகள் குறைவின்றிக் கிடைக்கும். மக்கள் சினமுற்று சண்டையிடுவர். மக்கள் பொன், பொருள், ஆடைகள் அறுசுவை ஆகியவற்றில் விருப்பம் கொண்டிருப்பர். இளம் கன்னியர்களுடன் கூடி, இன்பமாக வசதியுள்ள வாழ்வு வாழ்வர். மன்னர்கள் நாட்டைப் பெருக்க போர் புரிவர். எளியோரை, வலியோர் வாட்டுவர். சில அரசர்கள் தரும நெறியில் நின்று உயர் பதம் அடைவர்.

துவாபர யுகம்
———————-
துவாபர யுகத்தில் மக்களுக்கு கோபம், போட்டி மனப்பான்மை, சண்டை சச்சரவு இருக்கும். இந்த யுகத்தில் தரும தேவதை இரண்டு கால்களை இழந்து இரண்டு கால்களிலேயே நிற்கும். இந்த யுகத்தில் பாபம், புண்ணியம் வேறுபாடு புரியாமல் குழம்பிய மனத்துடன் மக்கள் தவிப்பர். சரியான குழம்பி இருக்கும். வியாசர் வேதங்களைப் பாகுபடுத்தி நான்காக வகுப்பார். புராணங்களும் இயற்றுவார்.

கலியுகம்
—————
கலியுகத்தில் மெய்ஞானம் விளங்கத் தானம் புரிவர். தரும தேவதை இந்த யுகத்தில் மூன்று கால்களையும் இழந்து ஒற்றைக் காலிலே இருக்கும். அதர்மம் தலைதூக்கி பொய்ம்மை, கொடுமை, இழப்பு, களவு, வஞ்சனை, கொலை, கொள்ளை ஆகியவை தழைத்திருக்கும். அந்தணர், அரசர், வணிகர் பலவகை இன்னல்களுக்கு ஆளாவர். ஒழுக்கம் தவறி நடப்பர். மன்னர்கள் (அ) ஆட்சியாளர்கள் பொன்னும், பொருளும் சேர்ப்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர். அந்தணர்கள் வேதம், வேள்வி பின்பற்றாமல் போக வாழ்வு வாழ்வர். வணிகர் பேராசை கொண்டு அதர்ம வழிகளில் செல்வர். வேடதாரிகள் மிகுதியாக இருப்பர். பெண்களிடம் ஒழுக்கக் குறைவு காணப்படும்.

கிருதயுகத்தில் ஓராண்டு தவம் செய்து பலன் பெறுவர். திரேதா யுகத்தில் மூன்றே மாதங்களில் அத்தகைய பலனைப் பெறலாம். துவாபர யுகத்தில் ஒரே மாதத்தில் பெறலாம். கலியுகத்தில் இறைவனிடம் பக்தி செலுத்தி, தூய உள்ளத்துடன் பூசனை புரிந்து ஒரே நாளில் அருளும், மேற்படி பலனும் பெறுவர். ஈசன் திருவடிகளில் சரண் புகுந்து அவரே அனைத்தும் எனக் கொள்பவர் வீடுபேறு பெறுவர்.

Share