முதல் தந்திரம் காரணாகமம்   உபதேசம்

முதல் தந்திரம் காரணாகமம் உபதேசம்

*திருமந்திரம்*

தூங்கிக்கண் டார்சிவ லோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ யோகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்சிவ போகமும் தம்உள்ளே
தூங்கிக்கண் டார்நிலை சொல்வதெவ் வாறே.

*பொருள்:* தூங்காமல் தூங்கி அறிதுயிலாய் நிற்கும் மெய்யன்பர்கள் சிவவுலகமும் தம்முளே சிவனை நினைவதாலும் அவன் படைப்பாம் உலகினைத் தம் முனைப்பாக நினையாமையாலும் தம்முட் கண்டனர். உலகைக் காரிய வடிவமாகும் மாயை என்றுமட்டும் கருதாமல் அதனைப் படைத்தருளிய வினைமுதற் காரணனெனப்படும் சிவபெருமானின் திருவருட் பண்புகளையுந் தெருண்டு தம்முள் கண்டனர். அதுபோலவே சிவனை விட்டு்ப் பிரியாது ஒட்டிநிற்கும் சிவயோகமும் தம்முள்ளே கண்டனர். அதுபோல் சிவபோகமாகிய திருவடி நுகர்வினைத் தம்முள்ளே கொண்டனர். அதனால் நிலையா உலகை மறந்து நிலைக்கும் சிவனை உலையாவுணர்வில் உழந்துணர்ந்து நிற்பார் தூங்கிக் கண்டார். அவர் தம் திருவடிப் பேற்றின் பொருவரு நிலையினை ஒருவராலும் கூறவொண்ணா தென்க. தூங்கல்: தூங்காமல் தூங்கல்; அறிதுயில். இது புரிவு நிலையில் நான்காம் நிலை. புரிவுநிலையினைச் சுத்தாவத்தை என்பர். இதன்கண் துரியநிலை நிட்டையே தூங்காமல் தூங்கல்.

Share